இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அடுத்ததாக நடைபெறும் 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட்டான நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
தடுமாறிய இந்தியா ஏ:
அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் தேவ்தூத் படிக்கல் 5 ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். போதாகுறைக்கு கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (20) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதனால் 86/5 என தடுமாறிய இந்தியா ஏ அணி 200 ரன்கள் தாண்டுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது துருவ் ஜுரேல் நங்கூரமாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருக்கு கை கொடுக்க முயற்சித்த ஹர்ஷ் துபே 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் டக் அவுட்டான போதிலும் குல்தீப் யாதவ் நிதானமாக விளையாடினார். அதைப் பயன்படுத்திய துருவ் ஜுரேல் அரை சதத்தை அடித்து இந்திய அணியை மீட்டெடுக்க போராடினார்.
கரை சேர்த்த ஜுரேல்:
அவருடன் இணைந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த குல்தீப் யாதவ் 20 (88) ரன்களை எடுத்த போது ரன் அவுட்டானார். அடுத்து வந்த முகமது சிராஜ் தம்மால் முடிந்தளவு போராடி 15 (31) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஜுரேல் சதத்தை அடித்து இந்தியாவை 200 ரன்கள் தாண்ட வைத்தார்.
இதையும் படிங்க: 167 ரன்கள் வெற்றிக்கு போதும்னு எங்களுக்கு தெரியும்.. வெற்றிக்கான எங்களோட பிளான் இதுதான் – ஷிவம் துபே பேட்டி
இறுதியில் பிரசித் கிருஷ்ணா டக் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜுரேல் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 132* (175) ரன்கள் குவித்து அவுட்டாகாமல் நின்றார். அவருடைய நல்ல ஆட்டத்தால் ஓரளவு கரை சேர்ந்த இந்தியா ஏ அணி 255 ரன்கள் எடுத்தது. அப்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு அதிகபட்சமாக டியன் வன் உரென் 4, ப்ரெனெலன் சுப்ராயன் 2, டிசெபோ மோரிக்கி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.



