
சயீத் முஷ்டாக் அலி 2024 டி20 உள்ளூர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் டெல்லி மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் 193-3 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ப்ரியன்ஸ் ஆர்யா 43, யாஷ் துள் 42, கேப்டன் ஆயுஷ் படோனி 25 ரன்கள் எடுத்தார்கள். மிடில் ஆர்டரில் மிரட்டலாக விளையாடிய அனுஜ் ராவத் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 73* (33) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார். பின்னர் 194 ரன்களை துரத்திய உத்திர பிரதேச அணிக்கு துவக்க வீரர்கள் ஆரியன் ஜூயல் 11, கரன் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் அதிகபட்சமாக பிரியம் கார்க் 54 (34) ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் மிடில் ஆடரில் நித்திஷ் ராணா 2, நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 10, சமீர் ரிஸ்வி 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் 20 ஓவரில் உத்தரபிரதேசத்தை 174க்கு ஆல் அவுட் செய்த டெல்லி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லிக்கு அதிகபட்சமாக பிரின்ஸ் யாதவ் 3, கேப்டன் ஆயுஷ் படோனி 2, சூயஸ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லிக்கு 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த துள் – ப்ரியன்ஸ் ஜோடியை உத்திரபிரதேசத்தின் நித்திஷ் ராணா பிரித்தார். அடுத்ததாக டெல்லி கேப்டன் ஆயுஷ் படோனி பேட்டிங் செய்தார்.
அப்போது நிதீஷ் ராணா வீசிய 13வது ஓவரின் மூன்றாவது பந்தில் இளம் வீரரான படோனி வேகமான சிங்கிள் எடுத்தார். அதனால் அதிருப்தியடைந்த நித்திஷ் ரானா அவரிடம் சில வார்த்தைகளை பேசினார். படோனியும் அதற்கு அதிரடி கொடுத்ததால் சண்டை ஏற்பட்டதை தொடர்ந்து நடுவர் உள்ளே புகுந்து அதை நிறுத்தினார்.
இதையும் படிங்க: பிடிச்ச காபாவில்.. இதை செஞ்சா ஆஸியை வீழ்த்தலாம்.. இந்திய அணிக்கு ஹைடன் கொடுத்த அட்வைஸ்
இத்தனைக்கும் நிதிஷ் ராணா டெல்லி அணிக்காக அவருடன் ஒன்றாக விளையாடிய சீனியர் வீரர். ஆனால் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக பேட்டிங் செய்த நித்திஷ் ராணாவை 2 ரன்களில் அவுட்டாக்கி ஆயுஷ் படோனி தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதே போல இந்தப் போட்டியில் உத்திரபிரதேசத்தை வீழ்த்திய படோனி தலைமையிலான டெல்லி நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது.