
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி டெல்லியில் 29வது போட்டி நடைபெற்றது. அதில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை ரியான் ரிக்கல்டன் 41, சூரியகுமார் யாதவ் 40, திலக் வர்மா 59, நமன் திர் 38* ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக விளையாடிய டெல்லி 19 ஓவரில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ஜேக் பிரேசர் டக் அவுட்டானாலும் கருண் நாயர் 89, அபிஷேக் போரேல் 32 ரன்கள் அடித்து அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தனர். அதனால் 119/1 என்ற நல்ல நிலையில் இருந்த டெல்லி கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது.
ஆனால் அப்போது அவர்களை காலி செய்த மும்பை பவுலர்கள் மிடில் ஆர்டரில் ராகுல் 15, கேப்டன் அக்சர் படேல் 9, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸை 1 ரன்களில் அவுட்டாக்கியது. அதே போல முதல் போட்டியிலேயே லக்னோவிடம் அபாரமாக ஃபினிஷிங் செய்து வெற்றியைப் பறித்த அசுட்டோஸ் சர்மா 17, விப்ராஜ் நிகாம் 14 ரன்களில் அவுட்டாகி இம்முறை வெற்றியை பெற்றுக் கொடுக்கத் தவறினார்கள்.
மும்பைக்கு அதிகபட்சமாக கரன் சர்மா 3, மிட்சேல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்நிலையில் அனைத்து நேரங்களிலும் அசுட்டோஸ் சர்மா, விப்ராஜ் நிகாம் போன்ற இளம் வீரர்கள் ஃபினிஷிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என டெல்லி கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். எனவே டாப், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட்டிங் செய்யாததே முதல் தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றியை நாங்கள் பையில் வைத்திருந்தோம். ஆனால் அப்போது சாதாரணமாக சில விக்கெட்டுகளை இழந்ததும் மிடில் ஆர்டரில் மோசமான ஷாட்டுகளை அடித்ததும் பின்னடைவைக் கொடுத்தது. அனைத்து நேரங்களிலும் லோயர் ஆர்டரில் இருக்கும் பேட்ஸ்மேன்களிடம் நீங்கள் பொறுப்பை விட முடியாது”
இதையும் படிங்க: கருண் நாயரால் டெல்லியிடம் கைமீறிய வெற்றியை பறிக்க அவர் தான் காரணம்.. மும்பை கேப்டன் பாண்டியா பேட்டி
“இது போன்ற சில மோசமான நாட்களைப் பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது. 10 ஓவர்கள் முடிவில் நாங்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தில் மகிழ்ச்சி. ஆனால் அப்போது நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. எங்களது 3 ஸ்பின்னர்களில் இருவர் பவர்பிளே, டெத் ஓவர்களில் பவுலிங் செய்யக்கூடியவர்கள். குல்தீப் நம்ப முடியாத வகையில் பவுலிங் செய்தனர். பேட்டிங் துறையைப் பொறுத்த வரை இந்தப் போட்டியை நாங்கள் மறக்க வேண்டும்” என்று கூறினார்.