அணியின் நலனுக்காக எதையும் செய்ய தயார்.. எனக்கு தேவை எல்லாம் இது ஒன்று தான் – அக்சர் பட்டேல் நெகிழ்ச்சி

Axar Patel
- Advertisement -

நடைபெற்று முடிந்த 2026 ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி டி20 சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை சந்தித்தது. அதற்கடுத்து தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எனக்கு இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் : அக்சர் பட்டேல்

இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக படுமோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தபோது அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. அந்த போட்டியில் டி20 அணியின் துணை கேப்டனான அக்சர் பட்டேல் விளையாடாதது இந்திய அணியின் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனெனில் வாஷிங்டன் சுந்தரை அந்த போட்டியில் விளையாட வைத்த இந்திய அணி அதிரடியாக அக்சர் பட்டேலை நீக்கியிருந்தது.

- Advertisement -

ஆனால் அதன் பின்னர் மீண்டும் அக்சர் பட்டேல் அணிக்குள் வந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் பங்கேற்று தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின்னர் தங்களது மகிழ்ச்சிகளை இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில் அக்சர் பட்டேலும் இந்த வெற்றி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். என்னை நீக்கியது குறித்து எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. ஆனால் அதற்கு அடுத்து நான் மீண்டும் அணிக்குள் வந்து சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அணியின் தேவைக்காக நான் வெளியேற்றப்பட வேண்டுமெனில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக காத்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 10 வருஷம் பேலன்ஸ் இருக்கு.. அதற்குள் 5-6 ஐ.சி.சி கோப்பை ஜெயிக்கனும் – ஹார்டிக் பாண்டியா விருப்பம்

அணியின் நலனுக்கு என்ன அவசியமோ அதனை செய்ய நிர்வாகம் நினைத்தால் நான் அதில் எந்த ஒரு இடையூறும் செய்யமாட்டேன். இறுதியில் இந்திய அணியின் வெற்றி தான் எனக்கு மிகவும் முக்கியம். இன்று என்னுடைய சொந்த மைதானத்தில் கோப்பையை வென்றுள்ளேன். இதைவிட பெரிய தருணம் எனக்கு இருக்காது என்று நினைக்கிறேன் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement