இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது மிகத்தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் துவங்கியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் அபாயமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதனைப் போன்றே தற்போது வெகு வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.

சாதாரண மக்கள் இன்றி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடிய சச்சின், யூசப் பதான், இர்பான் பதான், பத்ரிநாத் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியில் விளையாட உள்ள இவர் ஏற்கனவே அணி வீரர்களுடன் இணைந்து மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.

28ஆம் தேதி செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. அதன் பின்னர் இன்று நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உடனே தனிமைப்படுத்தப்பட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

மேலும் அவர் நலமுடன் உள்ளதாகவும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் அவர் மூலம் தோற்று வேறு யாருக்காவது பரவி இருக்குமா என்பது குறித்து இனி வரும் நாட்களில் தான் தெரியும். டெல்லி அணியில் இன்னும் சில வீரர்களுக்கு தொற்று பரவினால் அவர்கள் போட்டியை எதிர் கொள்வதில் சிக்கல் நேரிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



