
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இருந்து வந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் லக்னோ, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளை வீழ்த்தி அசத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது முதலில் பந்து விசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்களையும், ரயான் ரிகல்டன் 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் போட்டியின் இரண்டாம் பாதியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தலான வெற்றி பதிவு செய்தது. மும்பை அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் அவர்கள் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். அதேவேளையில் மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்த டெல்லி அணி தற்போது நான்கு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய அக்சர் படேலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசுகையில் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதன் காரணமாக ஸ்லோ ஓவர்ரேட் முறையில் இந்த அபராதம் டெல்லி அணியின் கேப்டனான அக்சர் படேலுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உடனே அதை செய்ய தோனி மேஜிக்மேன் கிடையாது.. பெரிய வலியை வெற்றியாக்க இதை செய்வோம்.. பிளெமிங் பேட்டி
இந்த தொடரில் முதல் முறையாக அக்சர் படேல் இந்த தவறை செய்துள்ளதால் அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறை மீண்டும் அடுத்த போட்டியில் செய்யும் பட்சத்தில் 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.