- Advertisement -

வினோ மன்கட் 68 வருட சாதனை காலி.. இந்தியாவின் மேட்ச் வின்னராக சச்சினை முந்தி வரலாறு படைத்த அஸ்வின்

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்திற்கு எதிராக ரன்கள் அடிப்படையில் இந்தியா தங்களின் பெரிய வெற்றியை பதிவு செய்தது. மேலும் 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது.

இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 144-3 என இந்திய அணி தடுமாறிய போது அபாரமாக பேட்டிங் செய்த அவர் ஜடேஜாவுடன் சேர்ந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 113 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

68 வருட சாதனை:

அத்துடன் 2வது இன்னிங்ஸில் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் வங்கதேசத்தை 243 ரன்களுக்கு சுருட்டி இந்தியாவின் வெற்றியில் உதவினார். அந்த வகையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 38 வருடம் 2 நாட்கள் வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 1955ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பெசாவர் நகரில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வினோ மன்கட் 37 வருடம் 306 நாட்களில் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த 68 வருட சாதனையை தற்போது உடைத்துள்ள அஸ்வின் இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் மேட்ச் வின்னர்:

இது போக ஏற்கனவே இந்தியாவுக்காக அவர் 10 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: 20*
2. சச்சின் டெண்டுல்கர்: 19
3. ராகுல் டிராவிட்: 15
4. அனில் கும்ப்ளே: 14
5. விரேந்தர் சேவாக்/விராட் கோலி: தலா 13

இதையும் படிங்க: 38 வயதில் உலக சாதனை.. ஹேட்லி, வால்ஷ் வாழ்நாள் சாதனைகளை உடைத்த அஸ்வின்.. வார்னேவின் சாதனை சமன்

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரையே முந்தியுள்ள அஸ்வின் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சாதனையையும் உடைத்த அஸ்வின் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -