
நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அவருடைய இடத்தில் தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் 2027 டிசம்பர் மாதம் வரை இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளார்.
கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்றவர். அத்துடன் லக்னோ அணியில் ஆலோசகராக இருந்த அவர் இந்த வருடம் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் நல்ல அனுபவத்தை கொண்டிருப்பதன் காரணத்தாலேயே அவரை பிசிசிஐ அடுத்த பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ரொம்ப ஸ்ட்ரிக்ட்:
முன்னதாக இந்தியாவுக்காக விளையாடும் போது சாகிப் அப்ரிடி போன்றவர்களுடன் சண்டையிட்ட கெளதம் கம்பீர் 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் மோதினார். மேலும் 2023இல் ஆலோசகராக விராட் கோலியுடன் சண்டையிட்ட அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடியவராக அறியப்படுகிறார். மேலும் எதையும் அதிரடியாக பேசக்கூடிய அவர் சிரிப்பதை ரசிகர்கள் அரிதாகவே பார்க்க முடியும்.
இந்நிலையில் லக்னோ அணியில் ஆலோசகராக இருந்த போது கௌதம் கம்பீர் அதிகமாக பேசாமல் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என இந்திய வீரர் ஆவேஷ் கான் கூறியுள்ளார். அதே சமயம் வெற்றியை எதிரணியிடம் விட்டுக் கொடுக்காமல் 100% சிறப்பாக விளையாட வேண்டும் எனவும் கம்பீர் எதிர்பார்ப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். கம்பீர் தலைமையில் லக்னோ அணியில் விளையாடிய அனுபவம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“உங்களுடைய 100% பங்களிப்பை கொடுத்து எதிரணியை விட சிறப்பாக செயல்படும் மனநிலையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதே நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அணி மீட்டிங்கில் அவர் மிகவும் குறைவாக பேசுவார். ஆனால் குறைவாக பேசினாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் விளக்கி விடுவார். அவர் அந்தந்த வீரர்களுக்கான வேலையை ஒதுக்கிக் கொடுப்பார்”
இதையும் படிங்க: அந்த இந்திய வீரர் என்னை கலாய்ச்சாரு.. ஐபிஎல் 2024 ஃபைனலில் மூடை ஸ்பாய்ல் பண்ணிட்டாங்க.. ஸ்டார்க் பேட்டி
“அவர் எப்போதும் அணியின் பயிற்சியாளர். எப்போதும் வெற்றியை விரும்பும் அவர் அதற்காக அனைவரும் 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதை விரும்புவார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இலங்கை நாட்டிற்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அத்தொடரில் இருந்து கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.