இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை சுவைத்த இந்தியா நாட்டிங்காமில் நடைபெற்ற 3-வது போட்டியில் போராடி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில் தனி ஒருவனாக போராடிய சூர்யகுமார் யாதவ் சதமடித்து 117 (55) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.
அவருக்கு உறுதுணையாக வேறு எந்த பேட்ஸ்மேன்களாவது 30 ரன்கள் அடித்திருந்தால் கூட இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைக்கிறது. இருப்பினும் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், லிவிங்ஸ்டன் போன்ற தரமான வீரர்களை கொண்ட இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்ற இந்தியா சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த அந்த அணியை பழிதீர்த்துக் கொண்டது.
சொதப்பும் விராட்:
இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1, 11 என 2 போட்டிகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தனது அபாரமான பேட்டிங் திறமையால் ஜாம்பவான் சச்சினை போல் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதமடித்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்திருந்தார். அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திணறும் அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானார்.
அதனால் சில மாதங்கள் ஓய்வெடுத்து ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றாத அவர் தொடர்ந்து விளையாடி வரும் போதிலும் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அதுபோக இடையிடையே ஓய்வெடுக்கும் அவர் இங்கிலாந்து டெஸ்டில் விளையாடி தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டுள்ளது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இதன் காரணமாக அவர் இல்லாத தருணத்தில் சிறப்பாக செயல்பட்ட தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
காட்டமான கபில்:
இப்படி 3 வருடங்களாக பார்க்கும் திரும்ப முடியாமல் ஓய்வும் எடுக்காமல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் விராட் கோலி இந்திய அணிக்கு பாரமாக மாறிவிட்டதாகவும் எத்தனை நாட்கள் பெரிய பெயரை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட முடியும் என்றும் என நிறைய முன்னாள் வீரர்கள் அவர் மீது கேள்விக்கணைகளை அம்புகளாக தொடுத்து வருகிறார்கள். குறிப்பாக பெரிய பெயர் இருந்தால் மட்டும் போதாது ரன்களும் அடிக்க வேண்டும் என்று விமர்சித்த ஜாம்பவான் கபில் தேவ் டி20 இந்திய அணியிலிருந்து விராட் கோலியை நீக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாக சமீபத்தில் பேசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
மதிப்பு தெரியல:
இருப்பினும் சர்வதேச அரங்கில் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளது சிறிய விஷயமல்ல என்று அவரின் பயிற்சியாளர் உட்பட நிறைய பேர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலைமையில் விராட் கோலி பற்றி கடுமையாக விமர்சித்திருந்த கபில்தேவ் கருத்தை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
அதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா “50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியும் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டுள்ளவரை நீக்குவது. சரியான முடிவுதான், ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்கிறது” என கடுமையான சிரிப்புடன் இந்தியர்களின் வேடிக்கையான விமர்சனத்திற்கு சாட்டையடி போல் பதில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
அவர் கூறுவது முற்றிலும் உண்மையாகும். ஏனெனில் காயம் பட்டாலும் சிங்கம் சிங்கமே என்பதுபோல் இதுவரை இந்தியாவுக்காக 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 3308 ரன்களை 50.12 என்ற அபாரமான சராசரியில் 137.66 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க : இப்படி ஒரு மாற்றத்தை ஏன் செய்யனும்? மீண்டும் இந்திய அணியை வம்பிற்கு இழுத்த – மைக்கல் வாகன்
ஆனால் தரமான வீரருக்கு பார்ம் என்பது தற்காலிகமானது க்ளாஸ் என்பது நிரந்தரமானது என்பதை புரிந்து கொள்ளாத கபில்தேவ் போன்ற இந்திய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஊடகங்களும் அவரை அணியிலிருந்து நீக்கினால் அது வரும் அக்டோபர் மாதம் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தங்களைப் போன்ற எதிரணிக்கு சாதகமான முடிவாக இருக்கும் என மறைமுகமாக தெரிவிக்கும் உஸ்மான் கவாஜா அதை சீக்கிரமாக எடுங்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.



