IND vs AUS : 36ஆல் அவுட்டுக்கு சின்னதாக பழி வாங்கிய இந்தியா – 42 வருடத்துக்கு பின் ஆஸ்திரேலியா மோசமான சாதனை

IND vs AUS Siraj SMith
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தபட்சம் 3 வெற்றிகளை பதிவு செய்து ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் விளையாடுகிறது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் மார்னஸ் லபுஸ்ஷேன் 49, ஸ்டீவ் ஸ்மித் 37 என ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் அந்த அணியின் நட்சத்திர வீரர்களை தவிர்த்து டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை வெறும் 177 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல், விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த டோட் முர்பி அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

- Advertisement -

சின்ன பழிக்கு பழி:
ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கேப்டன் ரோஹித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 120 ரன்கள் குவித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். அத்துடன் ரவீந்திர ஜடேஜா 60, அக்சர் பட்டேல் 84, முகமது ஷமி 37 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுத்து முக்கிய ரன்களை சேர்த்ததால் முதல் இன்னிங்சில் இந்தியா 400 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 3வது நாள் உணவு இடைவெளியில் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை விட படுமோசமாக பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் எஞ்சிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 3வது நாள் தேநீர் இடைவெளிக்கு முன் 2 மணி நேரத்தில் உலகில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இத்தொடரில் 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

முன்னதாக தங்களது பேட்டிங் வரிசையில் உள்ள 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இரு புறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் நாக்பூர் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்கள் ஆரம்பத்திலேயே விமர்சித்து ஸ்லெட்ஜிங் போரை துவக்கினர். அதற்கு கடந்த மாதம் காபாவில் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச்சை உருவாக்கி தென்னாப்பிரிக்காவை 2 நாட்களில் தோற்கடித்த நீங்கள் எங்களை பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட இந்தியர்கள் பதிலடி கொடுத்தனர்.

அந்த நிலையில் இந்திய ஸ்பின்னர்களுக்கு 2.9 டிகிரி மட்டுமே சுழன்ற நாக்பூர் பிட்ச் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி சுழன்று அதிகமாக கை கொடுத்தது. ஆனாலும் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றாத ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் போட்டின் எந்த தருணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அத்துடன் ஸ்மித், லபுஸ்ஷேன் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரமான சுழலை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் இல்லாமல் தடுமாறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதனால் வெறும் 91 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 2வது குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 83 ஆல்-அவுட் : மெல்போர்ன், 1980/81
2. 91 ஆல்-அவுட் : நாக்பூர், 2022/23
3. 93 ஆல்-அவுட் : மும்பை, 2004/05
4. 105 ஆல்-அவுட் : கான்பூர், 1959/60

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி – எதிர்த்து கேள்வி எழுப்பிய ரவி சாஸ்திரி

இதன் வாயிலாக கடந்த 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வெல்வதற்கு முன் அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட் செய்து சரித்திர தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை இந்தியா சின்னதாக பழி தீர்த்துள்ளதாக ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். அத்துடன் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தோல்வியை கொடுத்த இந்தியாவை பழி தீர்க்கும் எண்ணத்துடன் வந்த ஆஸ்திரேலியா பிட்ச் பற்றி வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறி அவமானத்தை சந்தித்துள்ளதாகவும் இந்திய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement