பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவை சாய்க்க சிட்னியில் மாஸ்டர் பிளான் போட்ட ஆஸ்திரேலியா – ரசிகர்கள் வியப்பு

AUs vs IND
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் 2023 தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக துவங்குகிறது. சர்வதேச அரங்கில் டாப் அணிகளாக கருதப்படும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முன்னாள் ஜாம்பவான்கள் ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் ஆகியோரது பெயரைக் கொண்ட இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக முழுமூச்சுடன் போராடுவதால் எப்போதுமே இத்தொடர் அனல் பறக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக 2001ஆம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் மும்பையில் தோற்று கொல்கத்தாவிலும் ஃபாலோ ஆன் பெற்ற இந்தியா பின்னர் லக்ஷ்மன் – டிராவிட் ஆகியோரது அபாரமான பார்ட்னர்ஷிப் மற்றும் ஹர்பஜன்சிங் ஹார்ட்ரிக் விக்கெட்களால் வரலாற்று சிறப்புமிக்க கம்பேக் வெற்றியை பதிவு செய்து சென்னையிலும் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது மறக்கவே முடியாது.

அதே போல் 2008இல் இந்தியாவுக்கு எதிராக நடுவர்கள் நடந்து கொண்டதும், ஹர்பஜன் – சைமன்ஸ் ஆகியோர் மோதிக்கொண்ட சர்ச்சைகளையும் இந்த தொடர் கொண்டிருக்கிறது. அப்படி மிகச்சிறந்த வரலாறு கொண்ட இந்த தொடர் இம்முறை வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் பைனலில் விளையாட போகும் அணிகளை தீர்மானிக்கும் தொடராக நடைபெற உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் திட்டம்:
குறிப்பாக பைனலுக்கு செல்ல இந்த தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடும் நிலையில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் ஃபைனல் வாய்ப்பை ஆஸ்திரேலியா உறுதி செய்து விட்டது. அதனால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களை வென்று வரலாற்றுத் தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா போராட உள்ளது.

பொதுவாக இந்தியாவில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும் என்பதால் அதற்கேற்றார் போல் போல் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. மேலும் அஷ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான திட்டங்களை ஏற்கனவே வகுத்து விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் வெளிப்படையாக எச்சரித்திருந்தனர். இந்த நிலைமையில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்கள், அஷ்வினுக்கு எதிரான திட்டம் என்பதை தாண்டி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பதற்கு பிரத்யேக திட்டத்தை ஆஸ்திரேலியா கையிலெடுத்துள்ளது.

- Advertisement -

அதாவது இந்த தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகள் இல்லாத காரணத்தால் தங்களது நாட்டில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச் ஒன்றை ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. அதில் தங்களது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை பயிற்சி எடுக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை சாய்க்கும் பயணத்தில் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் செயலிலும் களமிறங்கியுள்ளது. பொதுவாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் சிட்னியில் இயற்கையாகவே சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும்.

அதனாலேயே அந்த மைதானத்தில் இது போன்ற பிரத்தியேக பிட்ச்சை உருவாகியுள்ள ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக முழு வீச்சில் தயாராகும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த 2 தொடர்களில் தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவிடம் இம்முறையும் தோற்றால் அது ஹாட்ரிக் தோல்வியாகி விடும். எனவே அந்த அவமானத்தை தவிர்த்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெல்வதற்கு ஆஸ்திரேலியா இந்தளவுக்கு இப்போதே களமிறங்கி தீயாய் வேலை செய்து வருவது இந்திய ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு பிட்ச் இருக்குதுன்னு தெரிஞ்சா ஐ.பி.எல் ஆடவே அவரு வரமாட்டாரு – கம்பீர் விமர்சனம்

இருப்பினும் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா கடந்த 2012க்குப்பின் 10 வருடங்களாக உலகின் எந்த அணியிடமும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. எனவே அதே போல் இம்முறையும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெறும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புவது குறிப்பிடத்தக்கது.

Advertisement