இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்த இந்தியா 12 வருடங்கள் கழித்து ஒரு தொடரில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த 6 போட்டிகளில் குறைந்தது 4 வெற்றிகளை பெற்றால் மட்டுமே 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொந்த மண்ணிலேயே இந்தியா பரிதாபமாக தோற்றுள்ளது.
ஷமி வேற இல்ல:
அதன் காரணமாக சவாலான ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா தொடரை வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. அதனால் 2018 – 19, 2020 – 21 போல ஆஸ்திரேலியாவில் இம்முறை இந்தியா வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷமி இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். அதே சமயம் நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி இல்லாதது கண்டிப்பாக பெரிய இழப்பு”
குறைத்து எடை போடல:
“அவருடைய இடைவிடாத இயல்பு, லைன் மற்றும் லென்த், போட்டியில் பந்தால் பேசும் விதம் போன்றவற்றை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதிகமாக பேசி கேட்டுள்ளேன். அவர் பும்ராவுக்கு நிகரான திறனை கொண்டவர். எனவே அவர் இல்லாததால் டாப் 2 பவுலிங் சேர்க்கையை இந்தியா தவற விட்டு கொஞ்சம் பின்னடைவை சந்திப்பார்கள். ஆனால் கடந்த முறை என்ன நடந்தது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: சுப்மன் கில் மோசம்.. அவரை தவிர கோலி, ரோஹித் உட்பட யாருமே சுழலை தெம்பா அடிக்கல.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“ஏனெனில் ரிசர்வ் வீரர்களாக வந்தவர்கள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். எனவே இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் சமி இல்லாததால் பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வைத்து இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



