22 ரன்ஸ்.. கத்துக்குட்டியென குறைத்து எடை போட்ட கமின்ஸ்.. 9 வருட கௌரவத்தை இழந்த ஆஸ்திரேலியா

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் உலக சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 1 – 1 (2) என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

ஜனவரி 25ஆம் தேதி புகழ்பெற்ற பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் காவெம் ஹோட்ஜ் 71, ஜோஸ்வா டா சில்வா 79 ரன்கள் எடுத்த உதவியுடன் போராடி 311 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 289/9 ரன்களில் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

தப்பு கணக்கு:
ஏனெனில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 24/4 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது உஸ்மான் கவாஜா 75, அலெக்ஸ் கேரி 65 ரன்கள் எடுத்த உதவியுடன் மீண்டெழுந்த ஆஸ்திரேலியாவுக்கு கடைசி நேரத்தில் கேப்டன் பட் கமின்ஸ் அபாரமாக பேட்டிங் செய்து 64* ரன்கள் எடுத்தார். ஆனால் அப்போது 3வது நாள் இரவு நேரத்தில் பந்தை ஸ்விங் செய்து மடமடவென விக்கெட்டுகளை எடுத்து வெஸ்ட் இண்டீஸை தெறிக்க விடலாம் என்று குறைத்து மதிப்பிட்ட கேப்டன் பட் கமின்ஸ் 22 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் பரவாயில்லை என்பது போல் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

அதனால் இலவசமாக கிடைத்த 22 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் போராடி 193 ரன்கள் குவித்தது. இறுதியில் 216 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக 91* ரன்கள் எடுத்த போதிலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சமர் ஜோசப் 7 விக்கெட்கள் எடுத்த வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் காபா மைதானத்தில் 35 வருடங்கள் கழித்து வென்று மாபெரும் சாதனை படைத்தது. மறுபுறம் 2வது இன்னிங்ஸில் 22 ரன்கள் பின்தங்கியிருந்த போது அதை போராடி எடுத்திருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்க வேண்டியதில்லை என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: காலை உடைத்து கண்ணீருடன் வெளியேற வைத்த ஆஸியை.. காபாவில் 35 வருடம் கழித்து ஓடவிட்ட 24 வயது வீரர்.. மாஸ் பதிலடி

இருப்பினும் தங்களை குறைத்து எடை போட்டு ஆஸ்திரேலியா கொடுத்த 22 ரன்கள் முன்னிலையை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் வென்றது. அந்த வகையில் பட் கமின்ஸ் எடுத்த தவறான முடிவால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக 2015 முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே பார்த்து வந்த ஆஸ்திரேலியா 9 வருடங்கள் கழித்து முதல் முறையாக அதுவும் தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியை கண்டுள்ளது.

Advertisement