இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மீண்டும் அழுத்தமான ஃபைனலில் சுமாராக பேட்டிங் செய்து வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
குறிப்பாக ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 200 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் அஜிங்க்ய ரகானே 89 ரன்களும் ஷார்துல் தாக்கூர் 51 ரன்களும் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் 1 ரன்னில் அவுட்டானார்.
சாதிக்குமா இந்தியா:
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய கவாஜாவும் 13 ரன்களில் உமேஷ் யாதவ் வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேனுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் ரவீந்திர ஜடேஜாவை இறங்கி வந்து அடிக்க முயற்சித்து 34 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே டிராவிஸ் ஹெட்டையும் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விடாமல் ரவீந்திர ஜடேஜா 18 ரன்களில் அவுட்டாக்கினார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுக்கும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 41* ரன்களும் கேமரூன் கிரீன் 7* ரன்களும் எடுத்தனர். அப்போது 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 123/4 ரன்களை எடுத்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை விட 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் அந்த அணிக்கு கைவசம் 6 விக்கெட்டுகள் மீதம் இருப்பதால் குறைந்தது 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் அதற்கு 4வது நாள் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை விரைவில் இந்தியா ஆல் அவுட்டாக்க வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதாரண போட்டியிலேயே 4வது இன்னிங்ஸில் வெறும் 200 ரன்களை சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அழுத்தம் நிறைந்த மாபெரும் ஃபைனலில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் அவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்வார்களா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால் இப்போட்டி நடைபெறும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓவல் மைதானத்தில் இதற்கு முன் கடந்த 1902ஆம் ஆண்டு கடைசியாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 263 ரன்கள் இலக்கை போராடி சேசிங் செய்த இங்கிலாந்து வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன் பின் கடந்த 120 வருடங்களுக்கும் மேலாக இந்த மைதானத்தில் வேறு எந்த அணியும் 250 ரன்களை கூட வெற்றிகரமாக துரத்தியதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா 296 ரன்களை எடுத்து விட்டது.
இதையும் படிங்க:ஐ.சி.சி கோப்பைகளை ஜெயிக்கணுனா அந்த பயத்தை மொதல்ல விடுங்க. அட்வைஸ் வழங்கிய – ஹர்பஜன் சிங்
எனவே தற்போதைய நிலைமையில் இந்த போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முத்தமிட வேண்டுமெனில் ஓவல் மைதானத்தில் 120 வருடங்களாக எட்ட முடியாத இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா இப்போதே தள்ளப்பட்டுள்ளது. ஆனால் முதல் இன்னிங்ஸிலேயே ரகானே மற்றும் தாகூர் ஆகியோர் கடுமையாக போராடி ஃபாலோ ஆனை தவிர்த்து மானத்தை காப்பாற்றிய நிலையில் 2வது இன்னிங்ஸில் அவ்ளோ பெரிய இலக்கை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய பேட்ஸ்மேன்கள் எட்டிப் பிடித்து சாதிப்பார்களா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.



