93 ரன்ஸ்.. ஆசிய சாம்பியன் இலங்கையை ஊதித் தள்ளிய ஆஸி.. இந்தியாவுக்கு முன்பே நாக் அவுட்டானதா?

AUS vs SL
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் ஐந்தாம் தேதி சார்ஜாவில் 5வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய சாம்பியன் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை நட்சத்திர முதுகெலும்பு வீராங்கனை கேப்டன் சமாரி அட்டபட்டு 3 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதோடு கதை முடிந்தது போல மற்ற வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறலாக விளையாடினர். அதனால் 20 ஓவரில் இலங்கையை வெறும் 93-7 ரன்களுக்கு ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா எளிதான வெற்றி:

இலங்கைக்கு அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 35, டீ சில்வா 29* ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேகன் ஸ்கட் 3, சோபி மோலினக்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 94 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிஷா ஹீலி 4, ஜார்ஜியா 3, ஆஸ்லே கார்ட்னர் 12 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் துவக்க வீராங்கனை பெத் மூனி 43* (38), எலிஸ் பெரி 17, லிட்ச்பீல்ட் 9* ரன்கள் எடுத்தனர்.

அதனால் 14.2 ஓவரிலேயே 94-4 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அப்படி தங்களுடைய முதல் போட்டியிலேயே இலங்கையை எளிதாக தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களை வலுவான நடப்புச் சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. ஏற்கனவே 6 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா இம்முறையும் எங்களை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகளுக்கும் காண்பித்துள்ளது.

- Advertisement -

வெளியேறுகிறதா இலங்கை:

மறுபுறம் இலங்கை அணிக்கு ரனா விக்கிரமா, சுகந்திகா குமாரி, ப்ரபோதனி தலா 1 விக்கெட் எடுத்தும் போராடியும் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக ஆசிய சாம்பியனாக திகழும் இலங்கை தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இதையும் சேர்த்து அடுத்தடுத்த 2 போட்டிகளில் இலங்கை 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: செஞ்ச சாத்தியத்தை காப்பாத்திட்டேன்.. இராணிக் கோப்பை ஃபைனல் விருதை தம்பிக்கு சமர்ப்பிக்கிறேன்.. சர்பராஸ் பேட்டி

அதனால் செமி ஃபைனலுக்கு செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வெல்வதுடன் இந்தியா, பாகிஸ்தான் அதனுடைய கடைசி 2 போட்டிகளில் தோற்க வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த அணி கிட்டத்தட்ட நாக் அவுட் செய்யப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. அதே போல முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா தங்களது கடைசி 3 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement