RSA vs AUS : மாஸ் பேட்டிங் செய்த புதிய கேப்டன் – தெ.ஆ அணியை ஓடவிட்டு ஆஸ்திரேலியா உலக சாதனை வெற்றி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் ஆகஸ்ட் 30ஆம் தேதி கிங்ஸ்மீட் நகரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. 2021 டி20 உலக கோப்பையை வென்ற ஆரோன் பின்ச் ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் இத்தொடரில் ஆஸ்திரேலியாவை தலைமை தாங்கினார். அந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 226/6 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 6, மேத்தியூ ஷார்ட் 20 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் 3வது இடத்தில் களமிறங்கிய புதிய கேப்டன் மிட்சேல் மார்ஸ் கடைசி வரை அவுட்றாகாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை பந்தாடி 13 பவுண்டரி 2 சிக்சருடன் 92* (49) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் தனது பங்கிற்கு சரவெடியாக விளையாடிய டிம் டேவிட் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 64 (28) ரன்கள் விளாசி ஆஸ்திரேலியா பெரிய ரன்கள் எடுக்க உதவினார்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 227 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவரிலேயே தெம்பா பவுமா டக் அவுட்டாக அடுதடுத்த ஓவர்களில் வேன் டெர் டுஷன் 21, கேப்டன் மார்க்ரம் 5, அறிமுக போட்டியில் தேவால்ட் பிரேவிஸ் 5, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் மறுபுறம் தொடர்ந்து முடிந்தளவுக்கு போராடிய மற்றொரு தொடக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 56 (43) ரன்கள் எடுத்து அவுட்டானார். இதர வீரர்களும் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15.3 ஓவரிலேயே தென்னாபிரிக்கா 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தரமாக செயல்பட்டு 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க:PAK vs NEP : கோலிக்கு அடுத்து நான் தான்டா.. முதல் போட்டியிலேயே மாஸ் சம்பவம் செய்த – பாபர் அசாம்

அத்துடன் 111 ரன்கள் வித்யாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த ஆஸ்திரேலியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. ஆஸ்திரேலியா – 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2023*
2. ஆஸ்திரேலியா – 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2020
3. ஆஸ்திரேலியா – 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2020
4. ஆஸ்திரேலியா – 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2006
5. பாகிஸ்தான் – 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2013
6. இந்தியா – 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2022

Advertisement