ஸ்காட்லாந்து எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. வரலாற்றிலேயே ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா இருதரப்பு தொடரில் மோதியது இதுவே முதல் முறையாகும். அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.
அந்த நிலையில் கடைசிப் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு எடின்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து மீண்டும் தடுமாற்றமாகவே விளையாடி 20 ஓவரில் 149-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் மெக்முலன் 56 (39), ஜார்ஜ் முன்சி 25 (17) ரன்கள் எடுத்தார்.
ஆல் ரவுண்டராக க்ரீன்:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 3 விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி 2, சீன் அபோட் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 150 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 12, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் கேப்டன் மிட்சேல் மார்ஷ் ஸ்காட்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர்.
அதில் கேப்டன் மிட்சேல் மார்ஷ் 31 (23) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த டிம் டேவிட் அதிரடியாக 25 (14) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் மறுபுறம் அரை சதமடித்து கேமரூன் கிரீன் தொடர்ந்து அதிரடியாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62* (39) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.
சொந்த மண்ணிலும் அடி:
அவருடன் ஆரோன் ஹார்டி 11* (6) ரன்கள் எடுத்ததால் 16.1 ஓவரிலேயே 153-4 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வைட் வாஷ் செய்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக போராடிய ஸ்காட்லாந்து வெற்றியை நெருங்கி கடைசியில் கோட்டை விட்டது.
இதையும் படிங்க: துலீப் டிராபி போட்டியில் வெறியாட்டம் ஆடிய ரிஷப் பண்ட்.. வங்கதேச அணிக்கெதிரான டீமுக்குள்ள வந்துட்டாரு
அதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் குறைந்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்காட்லாந்து ஒரு வெற்றியாவது பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 3 போட்டிகளிலுமே நன்றாக துவங்கிய ஸ்காட்லாந்து ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோற்றது. இப்போட்டியில் அதிகபட்சமாக பார்ட்லே கர்ரி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.



