- Advertisement -
உலக கிரிக்கெட்

111 முறை.. ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. கிறிஸ் கெய்லை முந்திய டேவிட் வார்னர்.. புதிய டி20 உலக சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி ஜூன் 6ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 12 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்புறம் கேப்டன் மிட்சேல் மார்ஷ் தடுமாறி 14 (21) ரன்களில் அவுட்டானார். அதே போல அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் இங்கேயும் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓமன் பவுலர்களை அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியாவை காப்பாற்றினார். அவருடன் 4வது விக்கட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (51) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 111 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச அளவிலும் ஐபிஎல் போன்ற இதர டி20 போட்டிகளிலும் மொத்தமாக அவர் 111 முறை 50+ ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த டேவிட் வார்னர் புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் கிறிஸ் கெயில் 110 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3வது (105* முறை) இடத்தில் உள்ளார். அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஆரோன் பின்ச் (3120) சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை (3155*) படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 67* (36) ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: 52 ரன்ஸ்.. எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஹிட்மேன்.. கிங் கோலியையும் முந்தி 3 சாதனை

அதனால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 164/5 ரன்கள் எடுத்தது. ஓமன் சார்பில் அதிகபட்சமாக மெஹ்ரன் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய ஓமன் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 125/9 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகட்சமாக ஆயான் கான் 36 ரன்கள் எடுத்தார். மறுபுறம் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த உலகக் கோப்பையையும் வெற்றியுடன் துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3, மிட்சேல் ஸ்டார்க் 2, நாதன் எலிஸ் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -