ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க உள்ளது. அதற்கு தயாராவதற்காக உலகின் அனைத்து அணிகளும் தற்போது ஐசிசி நடத்தும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் மே 28ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் மோதிய பயிற்சி போட்டி நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நமீபியா எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 119/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜென் க்ரீன் 38 (30) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
9 பேருடன் ஆஸ்திரேலியா:
அதைத்தொடர்ந்து 120 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 10 ஓவரிலேயே 123/3 ரன்கள் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த அணிக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் 18, ஜோஸ் இங்லிஷ் 5, டிம் டேவிட் 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 54* (21), மேத்தியூ வேட் 12* (5) ரன்கள் விளாசி 60 பந்துகள் மீதம் வைத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தனர்.
மறுபுறம் நமீபியா சார்பில் அதிகபட்சமாக பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது. காரணம் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக மே 26ஆம் தேதி சென்னையில் ஃபைனலில் விளையாடிய அவர்கள் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட பின்பே அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று ஆஸ்திரேலிய அணியுடன் இணைய உள்ளனர். அதனால் இப்போட்டியில் 2 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அணியில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையும் படிங்க: 20 ரன்ஸ்.. ஒரே ஓவரில் 5 சிக்ஸ்.. ஃசெல்ப் எடுக்காத இலங்கை.. டி20 உ.கோ வேலையை ஆரம்பித்த நெதர்லாந்து
அதை சமாளிப்பதற்காக தேர்வுக் குழு தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் டெய்லி, ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ போரோவேக் ஆகியோர் நமீபியாவுக்கு எதிரான இப்போட்டியில் களமிறங்கினர். அந்த இருவருமே 20 ஓவர்களும் முழுமையாக ஃபீல்டிங் செய்தனர். இருப்பினும் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யவில்லை. இந்த வினோதமான நிகழ்வு ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



