
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. போதாக்குறைக்கு பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பையும் – நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் கச்சிதமாக பந்து வீசி வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது.
ரோஹித் சர்மா 12, சுப்மன் கில் 21, புஜாரா 1, விராட் கோலி 22, ரவீந்திர ஜடேஜா 4, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31, ஸ்டீவ் ஸ்மித் 26 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்தது.
எளிதான வெற்றி:
ஆனால் அப்போது அனலாக பந்து வீசி பீட்டர் ஹேண்ட்ஸகோம்ப் 19, அலெக்ஸ் கேரி 3, கேமரூன் க்ரீன் 21 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு மடக்கிய இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா தோல்வியை தவிர்க்க பொறுப்புடன் செயல்பட்டு போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சுமாராக செயல்பட்டு சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது.
ரோஹித் சர்மா 12, கில் 5, விராட் கோலி 13, ஜடேஜா 7, ஸ்ரேயாஸ் ஐயர் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் நேதன் லயன் 8 விக்கெட்களை சாய்த்தார். இறுதியில் இன்று துவங்கிய 3வது நாளில் 75 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா அஷ்வினிடம் டக் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 49* ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 6 பவுண்டரியுடன் 28* ரன்களும் எடுத்து வெற்றி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியால் நாங்களும் அவ்வளவு மோசமான அணி அல்ல என்பதையும் போராடாமல் தோற்காத ஆஸ்திரேலியர்கள் அல்ல என்பதையும் நிரூபித்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தையும் தக்க வைத்து 2 – 1* (4) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்யும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 109 ரன்களுக்கு சுருண்டதே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல் ரவீந்திர ஜடேஜாவின் நோபால், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சொதப்பலான பேட்டிங், அக்சர் படேலை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாத ரோகித்தின் சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: IND vs AUS : எளிதாக வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி – சொதப்பிய இந்தியா செய்ய வேண்டியது இதோ
அதனால் பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரின் கடைசி போட்டியில் வென்றால் தான் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை அதில் தோற்றால் விரைவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை குறைந்தபட்சம் 1 போட்டியில் தோற்க வேண்டும் அல்லது 1 போட்டியை டிரா செய்தால் தான் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.