IND vs AUS : 208 ரன்கள் அடித்தும் உதைவாங்கிய இந்தியா – தோல்விக்கான இந்த காரணங்களை கவனித்தீர்களா

- Advertisement -

டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதில் செப்டம்பர் 20ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இரவு 7 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 11 (9) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 2 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 35/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்தார். 5வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 12வது ஓவரை ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த போது 4 பவுண்டரி 2 சிக்சருடன் கேஎல் ராகுல் 55 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் 2 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 46 (25) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் பாண்டியா:
அந்த சமயத்தில் அக்சர் பட்டேல் 6 (6) தினேஷ் கார்த்திக் 6 (5) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பட்டைய கிளப்பிய பாண்டியா 7 பவுண்டரி 5 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 71* (30) ரன்களை 236.67 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு அற்புதமான பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் இந்தியா 208/6 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 209 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (13) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (4) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் உமேஷ் யாதவிடம் 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய பவுலிங்:
அடுத்தாக ஜோஸ் இங்கிலீஷ் 3 பவுண்டரியுடன் 17 (10) ரன்களில் அக்ஷர் பட்டேலிடம் கிளீன் போல்ட்டானாலும் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 18வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் கேட்ச்சை கோட்டை விட்டதுடன் 22 ரன்களை வாரி வழங்கினார். அவருக்குப் போட்டியாக 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமாரை வெளுத்த மேத்யூ வேட் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து தோல்வியை உறுதியாக்கினார்.

இறுதியில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 18 (14) ரன்களில் டிம் டேவிட் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய பட் கம்மின்ஸ் பவுண்டரி அடித்து பினிஷிங் கொடுத்தார். அவரை விட உண்மையான பினிசிங் கொடுத்த மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் எடுத்ததால் 19.2 ஓவரில் 211/6 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இப்போட்டியில் பேட்டிங்கில் குறை சொல்லமுடியாத அளவுக்கு 209 ரன்களை குவித்த இந்தியா பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பியது. முதல் பந்திலேயே புவனேஸ்வர் குமார் சிக்சர் கொடுக்க 3 வருடங்கள் கழித்து பந்துவீசிய உமேஷ் யாதவ் தன்னுடைய முதல் 4 பந்துகளில் 4 பவுண்டரிகளை கொடுத்தார். இருப்பினும் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இடையில் போராடிய இந்தியா கடைசி கட்ட ஓவர்களில் படுமோசமாக பந்துவீசி வெற்றியைத் தாரை வார்த்தது.

குறிப்பாக ஆசிய கோப்பையில் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கி புவனேஸ்வர் குமாரும் காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேலும் வெற்றியை தாரை வார்த்தனர். மேலும் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தாதது, தவறான ஃபீல்ட் செட்டிங் போன்ற ரோகித் ஷர்மாவின் குளறுபடியான கேப்டன்ஷிப்புக்கு மத்தியில் 3 கேட்ச்களையும் இந்தியா கோட்டை விட்டது.

மேலும் தீபக் சஹர் இருந்தும் உமேஷ் யாதவை விளையாடியது போன்ற தவறான அணி தேர்வும் அக்சர் படேல் தவிர எஞ்சிய அனைத்து பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதும் தோல்வியை கொடுத்தது. இதனால் சொந்த மண்ணில் இத்தொடரின் கோப்பையை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Advertisement