சாதித்த ஆஸி.. மாறாத அதே சொதப்பலால் உடைந்த 100 கோடி நெஞ்சம்.. இந்தியாவின் தோல்விக்கான காரணம் இதோ

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிக்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (26) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 81/3 என்ற சரிவை சந்தித்த இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய விராட் கோலி 54 (63) ரன்களில் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
அதே போல மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடியதால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுலும் முக்கிய நேரத்தில் 66 ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். இறுதியில் சூரியகுமார் யாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்ததால் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, பட் கமின்ஸ் 2, ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து 241 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஷமி வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் 15, ஸ்மித் 4 ரன்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் 47/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேனுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஓவர்களில் சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 2023 சாம்பியன்ஷிப் ஃபைனல் போலவே சதமடித்து 137 (120) ரன்கள் விளாசி சிராஜ் வேகத்தில் அவுட்டானாலும் இந்தியாவின் வெற்றியை பறித்தார். அவருடன் லபுஸ்ஷேன் 58* எடுத்ததால் 43 ஓவரிலேயே 241/4 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்களுடைய 6வது உலகக் கோப்பையை முத்தமிட்டது.

அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று வந்த இந்தியாவை அடக்கி லீக் சுற்றில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக அவதரித்து தங்களை கிரிக்கெட்டின் அசுரன் என்பதையும் நிரூபித்துள்ளது. இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மொத்தமாக 7 பவுண்டரிகள் அடித்த நிலையில் எஞ்சிய 9 வீரர்கள் சேர்ந்து வெறும் 9 பவுண்டரிகள் அடித்தது சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

மேலும் இதற்கு முந்தைய போட்டிகளில் மிடில் ஓவர்களில் இந்தியா அதிக ரன்கள் குவித்த நிலையில் இப்போட்டியில் பவர்பிளே முடிந்த பின் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது தோல்விக்கு காரணமானது. அதே போல இதற்கு முந்தைய போட்டிகளில் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை அள்ளிய நிலையில் இப்போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

மொத்தத்தில் 2013க்குப்பின் லீக் சுற்றில் அசத்தி நாக் அவுட்டில் செய்த அதே சொதப்பலை மீண்டும் அரங்கேற்றியுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு ரசிகர்களுக்கு நெஞ்சை உடைக்கும் தோல்வியை பரிசளித்துள்ளது. அதிலும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா மற்ற வீரர்களின் சொதப்பலால் இந்தியாவுக்கு கடைசி வரை கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.

Advertisement