ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் எட்டாம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பார்படாஸ் நகரில் 17வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் பரம எதிரிகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 39 (16) – டிராவிஸ் ஹெட் 34 (18) ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 35 (25) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் தடுமாற்றமாக விளையாடி 28 (25) ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அபாரம்:
இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30 (17) டிம் டேவிட் 11 (8) மேத்தியூ வேட் 17* (10) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அதனால் 20 ஓவரில் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக 200 ரன்கள் கடந்த அணியாக அசத்திய ஆஸ்திரேலியா 201/7 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப்ஸ் சால்ட் ஆகியோர் 7 ஓவரில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது ஆடம் ஜாம்பா அந்த ஜோடியில் சால்ட்டை 37 (23) ரன்களிலும் பட்லரை 42 (28) ரன்களிலும் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார்.
அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அடுத்ததாக வந்த வில் ஜாக்ஸை 10 (10) ரன்களில் காலி செய்து ஜானி பேர்ஸ்ட்டோவை 7 (13) ரன்களில் பெவிலியன் அனுப்பியது. அதே வேகத்தில் டெத் ஓவர்களில் ஆஸ்திரேலியா துல்லியமாக பந்து வீசியதால் அடுத்ததாக வந்த மொயின் அலி 25 (15) லியாம் லிவிங்ஸ்டன் 15 (12) ஹரி ப்ரூக் 20* (16) ரன்கள் மட்டுமே எடுத்து ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.
அதனால் 20 ஓவரில் இங்கிலாந்தை 165/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2, பட் கமின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் வாயிலாக 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: அவங்களே குழம்பிட்டாங்க.. பாகிஸ்தான் போட்டியில் எங்க நிலைமைய யோசிச்சு பாருங்க.. ஐசிசி மீது ரோஹித் அதிருப்தி
கடைசியாக அந்த அணி 2007 டி20 உலகக் கோப்பையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது. இது போக அனைத்து வகையான ஐசிசி தொடர்களிலும் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளிலும் 11 வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா எதிரணிகளை மிரட்டி வருகிறது.