
ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2025/26 சீசன் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. கடைசியாக 2010/11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் திணறும் இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது.
மறுபுறம் தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்தை மீண்டும் தோற்கடித்து கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. அந்த சூழ்நிலையில் அத்தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு மிட்சேல் ஸ்டார்க் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஜாக் க்ராவ்லியை டக் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த பென் டக்கெட்டை 21 (20) ரன்னில் காலி செய்த அவர் அடுத்து வந்த இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகன் ஜோரூட்டை டக் அவுட்டாக்கினார். அதனால் 39/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு ஓலி போப் – கேப்டன் ஹாரி ப்ரூக் ஆகியோர் நங்கூரமாக விளையாட முயற்சித்தனர்.
4வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் போப் 46 ரன்னில் கேமரூன் கிரீன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை 6 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கிய ஸ்டார்க் அதற்கடுத்ததாக வந்த அட்கின்சனையும் ஒரு ரன்னில் காலி செய்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ஹாரி ப்ரூக் 52 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில் வெறும் 32.5 ஓவரில் இங்கிலாந்தை 172 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாக்கியது. குறிப்பாக பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்தை முதல் நாளிலேயே வெறும் 197 பந்துகளில் ஆஸ்திரேலியா சுருட்டி வீசியுள்ளது. இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 2வது குறைந்த பந்துகளுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் 1887 சிட்னி ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து 143 பந்துகளுக்கு ஆல் அவுட்டானது முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டார்க் தம்முடைய சிறந்த பந்து வீச்சை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
இதற்கு முன் 2025 கிங்ஸ்டன் போட்டியில் 9 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்ததே அவருடைய முந்தைய சிறந்த பந்து வீச்சு. அத்துடன் 35 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 7+ விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்று சாதனையையும் ஸ்டார் படைத்துள்ளார். கடைசியாக 1990/91 பெர்த் போட்டியில் கிரைக் மெக்டெர்மோட் 8 விக்கெட்டுகளை எடுத்தார்.