
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் முதல் அரையிறுதிப் போட்டி துவங்கியது. அதில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கூப்பர் கோன்லி ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக விளையாடி ஷமியிடம் டக் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் இந்தியாவின் தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட் மீண்டும் அதிரடியாக விளையாடியதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அவரை தனது முதல் பந்திலேயே 39 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அடுத்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் – மார்னஸ் லபுஸ்ஷேன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் லபுஸ்ஷேனை 29 ரன்களில் காலி செய்த ஜடேஜா அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷை 11 ரன்னில் அவுட்டாக்கினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய ஸ்மித் அரை சதத்தை அடித்து அசத்தினார். இருப்பினும் அவரை 73 ரன்னில் ஷமி தக்க சமயத்தில் போல்ட்டாக்கினார்.
அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயற்சித்த போது அக்சர் பட்டேல் சுழலில் 7 ரன்னில் போல்டானார். ஆனால் இந்தப் பக்கம் அலெக்ஸ் கேரி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் எதிர்புறம் கை கொடுத்த முயற்சித்த பென் துவார்சுய்ஸ் 19 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்.
இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த அலெக்ஸ் கேரி 61 ரன்களில் ரன் அவுட்டானார். நாதன் எலிஸ் 10, ஆடம் ஜாம்பா 7 ரன்கள் எடுத்த உதவியுடன் 49.3 ஓவரில் ஆஸ்திரேலியா 264 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 2, வருண் சக்கரவர்த்தி 2, ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க: அஷ்வின் சொன்னதை அப்படியே அச்சு பிசுராமல் செய்துகாட்டிய வருண் – வலையில் சிக்கிய டிராவிஸ் ஹெட்
ஐசிசி ஒருநாள் தொடர்களில் சவாலான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதற்கு முன் 261 ரன்கள் தான் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காகும். அதை இந்தியா கடந்த 2011 உலகக் கோப்பை காலிறுதியில் அகமதாபாத் நகரில் தொட்டு ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது. தற்போது அதை விட அதிகமான சாதனை இலக்கை துரத்தி இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் செய்து வருகிறது.