16 அணிகள் கலந்து கொள்ளும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்தை ஐசிசி திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் தொடர் வைரஸ் ஆஸ்திரேலியாவையும் அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக அங்கு இத்தொடர் நடைபெறுவதில் பெரிய சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் இந்த உலக கோப்பை தொடரை திட்டமிட்டபடி நடத்தலாமா ? அல்லது தள்ளி வைக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு முறை வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்தை நடத்தியது.
இருப்பினும் இந்த இரண்டு கூட்டத்தின் முடிவிலும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனையின் போது ஒரு மாதம் பொறுத்திருந்து அந்த சூழ்நிலையை பார்த்து முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தள்ளிப்போனால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்துகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்திலும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாக தலைவர் பேசுகையில் : இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் போட்டி அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவோ, தள்ளி வைக்கப்படவோ இல்லை.
இன்னும் பல நாடுகள் கொரோனா அச்சுறுத்தலில் இருப்பதனால் 16 நாடுகளில் சூழ்நிலையை முன்வைத்து அவர்களை ஆஸ்திரேலியாவிற்கு வரவைப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என நினைக்கிறேன். எனவே உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்து நாங்கள் சர்வதேச கவுன்சிலிடம் ஆலோசித்து வருகிறோம்.

எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இந்த தருணத்தில் கணிப்பது சற்று கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இத்தொடர் நடைபெறாது என்ற முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.



