ஐசிசி மகளிர் உ.கோ: 76/7 டூ 221/9.. பாகிஸ்தானை நொறுக்கிய லேடி மேக்ஸ்வெல்.. ஆஸி 17க்கு 17 மாஸ் வெற்றி

Aus vs Pak
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்புவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஓபனிங் வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி 20, ஃபோப் லீச்பீல்ட் 10 ரன்களில் அவுட்டானார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலிஸ் பெரி 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கிய பெத் மூனி நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

லேடி மேக்ஸ்வெல் போல:

ஆனால் எதிர்ப்புறம் அனபெல் சதர்லேண்ட் 1, ஆஸ்லே கார்ட்னர் 1, டகிலா மெஹ்ராத் 5, ஜார்ஜியா வேர்கம் 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை உண்டாக்கினர். அதனால் 76/7 என சரிந்த ஆஸ்திரேலியா 150 ரன்கள் தாண்டுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அப்போது ஆஸ்திரேலியா உலக சாம்பியன் என்பதை நிரூபிக்கும் வகையில் மறுபுறம் மூனி நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.

எதிர்புறம் வந்த கிம் கார்த் 11 (47) ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த அலானா கிங் பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்தார். அதனால் கிடைத்த உற்சாகத்தில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மூனி அரை சதம் கடந்த பின் அதிரடியை துவக்கினார். 40 ஓவருக்கு பின் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்த அவர் 11 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 109 (114) ரன்களை விளாசி கடைசி பந்தில் அவுட்டானார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

அவருடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிளன் மேக்ஸ்வெல் தனியாளாக இரட்டை சதத்தை அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தது நினைவுக்கு வந்தது. இறுதியில் அவருடன் இணைந்து மறுபுறம் அசத்திய அலானா 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51* (49) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

அதனால் 50 ஓவரில் ஆஸ்திரேலியா 221/9 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நசாரா சந்து 3 கேட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தானை அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 114 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சிட்ரா ஆமின் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிம் கார்த் 3, மேகன் ஸ்கட் 2, அனபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: வெ.இ அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் – காரணம் என்ன?

அதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 17 மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 17வது வெற்றியைப் பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு லேடி மேக்ஸ்வெல் என்று சொல்லும் அளவுக்கு விளையாடி முக்கிய பங்காற்றிய மூனி ஆட்டநாயகி விருதை வென்றார்.

Advertisement