6/3 டூ 181/6.. போராடிய நியூஸிலாந்தை அசால்ட்டாக சாய்த்த ஆஸி.. 2007 சைமன்ஸ் சாதனையை சமன் செய்த மார்ஷ்

AUS vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மௌங்கனி நகரில் இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டிம் சைபர்ட் 4, டேவோன் கான்வே 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த மார்க் சேப்மேன் கோல்டன் டக் அவுட்டானதால் 6/3 என நியூஸிலாந்து ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது 3து இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய டிம் ராபின்சனுடன் எதிர்புறம் டேரில் மிட்சேல் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

போராடிய நியூஸிலாந்து:

ஆரம்பத்தில் நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடியது. அதில் 23 வயதாகும் இளம் வீரர் ராபின்சன் 31 பந்துகளில் அரை சதமடித்து போராடினார். அவருடன் சேர்ந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மிட்சேல் 34 (23) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த பேவோன் ஜேக்கப்ஸ் 20 (21) ரன்களில் ரன் அவுட்டானார்.

ஆனால் இந்தப் பக்கம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து அடித்து நொறுக்கிய ராபின்சன் 65 பந்துகளில் சதத்தை அடித்தார். கடைசி வரை அவுட்டாகாத அவர் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 106* (66) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடைய ஆட்டத்தால் தப்பிய நியூஸிலாந்து 181/6 ரன்கள் அடித்து அசத்திய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பென் துவார்சுய்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அசால்ட்டாக வென்ற ஆஸ்திரேலியா:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் ஆரம்பம் முதலே நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவருடன் சேர்ந்து 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டிராவிஸ் ஹெட் 31 (18) ரன்கள் விளாசி நல்லத் துவக்கத்தைக் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மேத்தியூ ஷார்ட் தமது பங்கிற்கு 29 (18) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து நியூசிலாந்தை பந்தாடிய மார்ஷ் 23 பந்துகளில் அரை சதத்தை அடித்து 9 பவுண்டரி 5 சிக்சருடன் 85 (43) ரன்கள் விளாசினார். இதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக 2வது அதிகபட்ச டி20 ஸ்கோர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆண்ட்ரூ சைமன்ஸ் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த டாப் ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி கண்டிப்பா மாறுவார் – முன்னாள் வீரர் நம்பிக்கை

இதற்கு முன் 2007 வாகா மைதானத்தில் சைமன்ஸும் 85* ரன்கள் அடித்துள்ளார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக 21* (12), ஸ்டோனிஸ் 4* (1) ரன்கள் எடுத்ததால் 16.3 ஓவரிலேயே 185/4 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. மறுபுறம் மாட் ஹென்றி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் அட்டகாசமாக போராடிய நியூசிலாந்து மோசமான பந்து வீச்சால் தோற்றது.

Advertisement