இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 5ஆம் தேதி வதோதராவில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி முதல் ஓவரிலிருந்தே இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கியது. குறிப்பாக கேப்டன் வாட்சன் தமது ஸ்டைலில் அதிரடியாக பேட்டிங் செய்தார். அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய ஷான் மார்ஷ் 22 (15) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த பென் டங்க் அவர்களை விட முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கினார்.
துவைத்த ஆஸ்திரேலியா:
அந்த வகையில் வாட்சன் – டங்க் ஆகியோர் ஜோடி சேர்ந்து இரண்டு பக்கமும் சுமாராக பவுலிங் செய்த இந்திய பவுலர்களுக்கு கருணைக் காட்டாமல் பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டனர். இந்திய பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்ததால் அந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் கேப்டன் சச்சினும் தடுமாறினார். அதைப் பயன்படுத்தி தொடர்ந்து வெளுத்து வாங்கிய அந்த ஜோடி இந்திய பவுலர்களை அடித்து துவைத்து கடைசி வரை அவுட்டாகாமல் போட்டியை ஃபினிஷிங் செய்தது.
அதில் வாட்சன் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதத்தை அடித்து 110* (52) ரன்கள் குவித்தார். அவருடன் 236 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டங்க் 12 பவுண்டரி 10 சிக்ஸருடன் 132* (53) ரன்களை 249.06 ஸ்ட்ரைக் ரேட்டில் பட்டாசாக வெளுத்து வாங்கி ஆஸ்திரேலியா 269-1 ரன்கள் குவிக்க உதவினார். அடுத்ததாக பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய கிளாஸ் நிறைந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சச்சின் போராட்டம்:
ஆனால் எதிர்ப்புறம் நமன் ஓஜா 19, சௌரத் திவாரி 1, இர்ஃபான் பதான் 11 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும் மறுபுறம் முடிந்தளவுக்கு சரவெடியாக பேட்டிங் செய்த சச்சின் 27 பந்துகளில் அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 64 (33) ரன்களில் அவுட்டானார். ஆனால் மீண்டும் எதிர்புறம் யூசுப் பதான் 25, பவன் நெகி 14, ஸ்டூவர்ட் பின்னி 2, குர்கீரத் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம்.. இனி அதை செய்யக்கூடாது – தெம்பா பவுமா வருத்தம்
இறுதியில் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா மாஸ்டர்ஸ் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு சேவியர் டாத்ரி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 4 போட்டிகளில் முதல் தோல்வியை இந்தியா மாஸ்டர்ஸ் சந்தித்தது. இருப்பினும் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் இந்தியா மாஸ்டர் செமி ஃபைனல் செல்ல பிரகாச வாய்ப்பு இருக்கிறது.



