6 பந்தில் 4 விக்கெட்.. ஹர்மன்ப்ரீத் போராட்டம் வீண்.. சிங்கிள் எடுக்க தெரியாமல் ஆஸியிடம் தோற்ற இந்தியா வெளியேறியதா?

Aus vs IND
- Advertisement -

ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 13ஆம் தேதி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு சார்ஜாவில் 18வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் செமி ஃபைனல் செல்வதற்கு வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பெத் மூனி 2, ஜார்ஜியா வார்ஹேம் 0 ரன்களில் ரேணுகா சிங் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதனால் 17-2 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் கிரேஸ் ஹாரிஸ் நிதானமாக விளையாடி 40 (51), மிடில் ஆர்டரில் கேப்டன் டகிலா மெக்ராத் 32 (26) ரன்கள் அடித்து சரிவை சரி செய்தனர்.

- Advertisement -

டாப் ஆர்டர் சொதப்பல்:

அதை வீணடிக்காமல் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி அதிரடியாக 32 (23), லீச்பீல்ட் 15 (8), அனபெல் 10 (6) ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 151-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு தீப்தி சர்மா, ரேணுகா சிங் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 152 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அதிரடி காட்ட முயற்சித்த சபாலி வர்மா 20 (13) ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் தடுமாறிய மந்தனா 6 (12) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஜெமிமா 16 (12) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் 47-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் நங்கூரமாக விளையாடினார். அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த தீப்தி சர்மா 29 (25) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா நாக் அவுட்டானதா:

ஆனால் அடுத்து வந்த ரிச்சா கோஸ் 1 ரன்னில் ரன் அவுட்டாகி எடுத்ததை அதிகரித்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ஹர்மன்பிரித் அரை சதமடித்து போராடியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் ஹர்மன்ப்ரீத் சிங்கிள் எடுத்த நிலையில் அடுத்த பந்தில் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த பூஜா வஸ்திரகர் 9 (6) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அடுத்ததாக வந்த அருந்ததி ரெட்டி, ஸ்ரேயாங்கா பாட்டில், ராதா யாதவ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை கேப்டனுக்கு கூட கொடுக்க திறமையில்லாமல் டக் அவுட்டானார்கள். அதனால் கடைசி 5 பந்துகளில் எதிர்புறம் ஸ்ட்ரைக்கை பெறும் வாய்ப்பை பெறாத ஹர்மன்ப்ரீத் 54* (47) ரன்கள் எடுத்துப் போராடியும் இந்தியாவின் தோல்வியை பார்க்க மட்டுமே முடிந்தது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு எதிராக கேப்டனாகும் ருதுராஜ்? அரிதான போட்டிக்கு பிசிசிஐ திட்டம்

மொத்தத்தில் 20 ஓவரில் இந்தியாவை 142-9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் போராடி தோற்ற இந்திய அணி நாக் அவுட்டாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அதனுடைய கடைசி போட்டியில் வென்றால் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.

Advertisement