
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது சென்னை வந்தடைந்துள்ள இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ஜாஹீர் கான் மற்றும் கும்ப்ளே ஆகியோரது சாதனைகளை முறியடிக்க காத்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்கப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய மண்ணில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அணில் கும்ப்ளே தன்வசம் வைத்துள்ளார். அணில் கும்ப்ளே இந்தியாவில் மட்டும் 476 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேவேளையில் தற்போது அஸ்வின் இந்திய மண்ணில் 455 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
அதோடு வங்கதேச அணிக்கு எதிராக அதிக விக்கெடுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் முதல் இடத்தில் இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் அவர் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அஸ்வின் தற்போது வரை வங்கதேச அணிக்கு எதிராக 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : டிராவிடை விட கவுதம் கம்பீரின் இந்தக்குழு வித்தியாசமா இருக்கு ஆனாலும் பிரச்சனை இல்ல – ரோஹித் சர்மா பேட்டி
எனவே எதிர்வரும் இந்த தொடரில் வெறும் 8 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினால் கூட வங்கதேச அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கியதில் இருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அஸ்வின் நிச்சயம் இந்த தொடரில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.