கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு தான் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் பயிற்சியாளரான டிராவிட் தெரிவித்திருந்தார். மேலும் தனது குடும்பத்துடன் அவர் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் அவரை தொடர்ந்து பயிற்சியாளராக செயல்படும்படி வற்புறுத்தவில்லை.
புதிய பயிற்சியாளர்குழு வித்தியாசமானது :
இதன் காரணமாக அடுத்த புதிய பயிற்சியாளருக்கான தேடல் நடைபெற்ற வேளையில் சிறிய போட்டிக்கு பிறகு புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது.
அந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் கௌதம் கம்பீர் பயிற்சி வழங்கி வருகிறார்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் குழு வித்தியாசமான யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முன்னாள் பயிற்சியாளரான டிராவிடை ஒப்பிடும்போது கம்பீர தலைமையிலான பயிற்சியாளர் குழு வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர்.
அதில் எங்களது வீரர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. பயிற்சியாளர் குழு மற்றும் வீரர்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையே புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது நிறையவே இருக்கிறது. நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. ஆஸ்திரேலியா தொடருக்கான ஒத்திகையாக நாங்கள் இந்த தொடரை பார்க்கவில்லை.
இதையும் படிங்க : சென்னை டெஸ்ட்டில் குல்தீப் யாதவை விட அக்ஸர் படேலுக்கு தான் வாய்ப்பு அதிகம் – ஏன் தெரியுமா?
இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரும் எங்களுக்கு மிக முக்கியமான தொடர் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான பயிற்சிக்காக ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னை வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



