
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகி இருந்தாலும் மூன்றாவது போட்டியின் போது ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பினார். அதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு ஆட்டங்களிலும் அடுத்தடுத்த சதங்களை விளாசிய விராட் கோலி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்று விட்டதால் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை குறி வைத்து ஒரு வடிவ கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் அவரை இந்திய அணியின் நிர்வாகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த கையோடு அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் இப்படி விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் விளையாட ஒப்பு கொண்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலிக்கு தன்னை சுற்றி கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து நன்றாக தெரியும். ஒரு சிலர் அவரது திறமையின் மீது சந்தேகப்படுகின்றனர்.
அப்படி சில சந்தேகங்கள் அவர் மீது இருக்கும் போது அதை போக்க வேண்டும் என்கிற வெறி இன்றளவும் விராட் கோலியிடம் இருக்கிறது. எனவே தான் தன்னுடைய திறமையையும், ஸ்கில்லையும் வெளிக்காட்டுவதற்காக அவர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன். விராத் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : இதுதான் எங்களுக்கு கடைசினு தெரியும்.. 2024 டி20 உலககோப்பை குறித்து பேசிய ரோஹித் சர்மா – விவரம் இதோ
எப்போதுமே அவருக்கு போட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தான் தற்போது அவர் மீது இருக்கும் சந்தேகத்தை போக்கவே இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறார் என்றும் தான் கருதுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.