கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எந்த ஒரு போட்டியிலேயும் தோற்காமல் இறுதிவரை சென்று இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
எங்க 2 பேருக்குமே இதுதான் கடைசினு தெரியும் : ரோஹித் சர்மா
அந்த இறுதிப் போட்டி நிறைவடைந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்களான விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கூட்டாக டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே அனுபவ வீரர்களாக இந்திய அணியில் நீங்கா இடம் பிடித்து விளையாடி வந்த அவர்கள் மூவரும் ஒரே போட்டியில் இந்திய டி20 அணியில் இருந்து விடைபெற்றது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சாம்பியன்களாக அவர்கள் அணியில் இருந்து வெளியேறியதால் அவர்களை வாழ்த்துக்களுடன் வழி அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை விளையாடும் போது என்ன நிகழ்ந்தது? தனக்குள் என்ன மன ஓட்டம் இருந்தது? என்பது குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் அந்த டி20 உலக கோப்பை தொடரில் நல்ல பாசிட்டிவான எண்ணத்துடன் விளையாடினோம்.
உலககோப்பையை வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது குறிக்கோளாக இருந்தது. அதிலும் குறிப்பாக அணியின் சீனியர் வீரராக நான் அந்த தொடரினை விராட் கோலியுடன் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் நானும் விராட் கோலியும் பல ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். நான் இந்திய அணிக்கு வந்த பிறகு ஒரு ஆண்டு கழித்து தான் விராட் கோலி அணிக்குள் வந்தார்.
ஆனாலும் நாங்கள் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளோம். நாங்கள் எங்களது கரியரை ஆரம்பித்ததும் பின்னர் பெரிய வீரர்களாக மாறியதையும் ஒன்றாகவே உணர்ந்தோம். அந்த அளவிற்கு நிறைய போட்டிகளை நாங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம். ஐ.பி.எல் போட்டிகளை தவிர்த்து உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்தது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? உண்மை காரணத்தை வெளிப்படுத்திய – ஆண்ட்ரே ரசல்
அதோடு இந்த 2024 டி20 உலக கோப்பை தொடர் தான் டி20 போட்டிகளில் எங்களுக்கு கடைசி உலக கோப்பை என்று தெரியும். அதன் காரணமாகவே அதை வெற்றியுடன் முடிக்க நினைத்தோம் என ரோகித் சர்மா கூறியிருந்தார்.



