இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது கடந்த ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாளான இன்று இரு அணிகளுக்குமே சரிசமமான வெற்றி வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி ஜெயிக்கணும்னா அவங்க 2 பேரால் தான் முடியும் : ரவிச்சந்திரன் அஷ்வின்
அதன்படி நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இரு அணிகளுமே சரியாக 387 ரன்களை குவிக்க அடுத்ததாக இங்கிலாந்து அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களை குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
போட்டியின் நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் குவித்துள்ளதால் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை. அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. இப்படி ஒரு சூழலில் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கடைசி நாள் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த தனது கருத்தினை முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் டெஸ்ட் போட்டிக்கு முழுமையாக தயாராகவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் முதல் இன்னிங்ஸ்சில் சிறப்பாக பந்துவீசிய அவர் இரண்டாவது இன்னிங்சின் போது லைன் மற்றும் லென்த்தை பிடிக்க தடுமாறி வருகிறார்.
அதே வேளையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். அதுவே என்னுடைய கணிப்பு ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மனது வைத்தால் மட்டுமே முடியும் என அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : ராகுல் டிராவிட்டின் 23 வருட சாதனையை உடைத்த கேப்டன் சுப்மன் கில்.. இங்கிலாந்தில் மாபெரும் வரலாற்று சாதனை
பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்ஸ்சின் போது இலக்கு சிறியதாக இருந்தாலும் சேசிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதனால் அஸ்வின் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய ஆட்டத்தில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரை தவிர்த்து நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



