இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2 போட்டிகளின் முடிவில் சம நிலையில் இருக்கும் அத்தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவும் 387 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
டிராவிட்டை முந்திய கில்:
அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 192 ரன்களை துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் எனத் தடுமாறி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கருண் நாயரும் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். கடந்த போட்டியில் 430 ரன்கள் அடித்து பல சாதனைகளை புரிந்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்த ஆட்டநாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியில் அடித்த 16, 6 ரன்களையும் சேர்த்து இத்தொடரின் 3 போட்டிகளில் அவர் 607* ரன்கள் குவித்துள்ளார்.
இந்தியா வெல்லுமா:
இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2002 தொடரில் இங்கிலாந்து மண்ணில் ராகுல் டிராவிட் 602 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அந்த 23 வருட சாதனையை கில் உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் இந்திய அணிக்காக அதை செய்ய வேண்டும் என்கிற ஆசை என்னிடம் உள்ளது – ரஹானே விருப்பம்
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் ஒரு ரன்னில் அவுட்டானார். அதனால் ஐந்தாவது நாளில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ராகுல் 33* ரன்களுடன் இந்தியாவில் வெற்றிக்காக நங்கூரமாக பேட்டிங் செய்து வருகிறார்.



