அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் அதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து ஏமாற்றத்தை அளித்தது. அதன் பிறகு தற்போது ஒரு மாத காலமாக ஓய்வில் இருக்கும் இந்திய அணிக்கு அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறது.
அடுத்த தலைமுறை ஸ்பின்னர் :
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இந்திய அணிக்கு இன்னும் 10 டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. அந்த வகையில் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
இதன் காரணமாக எதிர்வரும் இந்த தொடர்கள் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதினால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அடுத்து அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த கட்ட சுழற்பந்து வீச்சாளர்களை தயார் செய்யும் முனைப்புடன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய தமிழக வீரர் அஸ்வின் கூறுகையில் : நமது அணியில் தற்போது ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் ஹர்திக் பாண்டியாவிற்கான மாற்று வீரரை நாம் விரைவில் கண்டறிய வேண்டும். பாண்டியா போன்ற ஒரு வீரர் நமது அணியில் இருக்கும் போது நல்ல சாதகம் கிடைக்கும்.
அதே போன்று நிதிஷ் ரெடியின் செயல்பாடுகளை பார்க்க ஆவலாக உள்ளேன். அவரது செயல்பாடுகளும் நன்றாக உள்ளது. நமது அணியை பொறுத்தவரை அடுத்த கட்ட ஸ்பின்னர்களை தயார் செய்ய வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. ஜடேஜாவிற்கும் எனக்கும் பிறகு குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் தயாராக இருக்கின்றனர்.
இதையும் படிங்க : இந்தியாவின் பலத்தை கண்டு பிடிச்சுட்டோம்.. அதை வெச்சே ஹாட்ரிக் வெற்றியை உடைப்போம்.. லபுஸ்ஷேன் சவால்
அவர்களை இந்திய அணி மிகச் சிறப்பாக தயார்படுத்தும் என்று அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் இவ்வாறு கூறினாலும் ஜடேஜாவின் இடத்தை அக்சர் பட்டேல் பூர்த்தி செய்வார். ஆனால் அஸ்வினின் இடத்தை பூர்த்தி செய்யப்போகும் அந்த வீரர் யார்? என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.