
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 350 ரன்கள் வரை அடித்தும் தோல்வியை சந்தித்திருந்தது. அதற்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டது தான் என்கிற பெரிய விமர்சனம் இருந்தது. ஆனாலும் பனிப்பொழிவின் காரணமாகவே பந்து வீச்சாளர்களால் கிரிப் செய்து வீச முடியவில்லை என்ற விளக்கத்துடன் ஒருபுறம் ஆதரவும் இருந்தது.
அதிலும் குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவின் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனம் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தகர்க்கும் விதமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஓவர்களை வீசியவர் 66 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்தில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் பிறகு மீண்டும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சமூகவலைதள பதிவின் மூலம் ஒரு சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஒருவர் மோசமான நாட்களில் இருக்கும் போது அவரை விமர்சிப்பதும், அணியிலிருந்து நீக்குவதும் மிகவும் சுலபம். ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவருடைய உண்மையான தரம் வெளியே வரும் என்பதை பிரசித் கிருஷ்ணா நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது ரன்னப் மற்றும் ஆட்டத்தின் சூழலை பிரசித் கிருஷ்ணா இன்னும் புரிந்து கொண்டால் அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என்று அவருக்கு ஆதரவாக சில தகவல்களை பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க : முதல் இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – அபிஷேக் சர்மா
ஆனால் அவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் நிறைய ரன்களை அவர் விட்டுக் கொடுப்பதால் அவர் மீது விமர்சனம் இருந்து வரும் வேளையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.