
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து இருந்ததால் ஐந்தாவது நாளில் இந்திய அணி எளிதில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 5ஆவது நாளில் 9வது விக்கெட்டாக ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் விளையாடிய விதத்தை பார்க்கும் போது நிச்சயம் இருவருமே அரைசதத்தை தாண்டி போதுமான ஓவர்கள் விளையாடுவார்கள் என்று தோன்றியது.
ஆனாலும் இந்திய அணி சரியான நேரத்தில் டிக்ளேர் முடிவை அறிவித்து 60 ஓவர்களில் 271 ரன்களை குவிக்க வேண்டும் என இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்தது. அதன்படி விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 52 ஓவர்கள் விளையாடி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் பேட்டிங் செய்துவிட்டு உணவு இடைவேளையின் போது ஓய்வறைக்கு திரும்புகையில் என்ன நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கோலி கூறிய திட்டத்தையும் தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் பேட்டிங் செய்து விட்டு உணவு இடைவேளைக்கு திரும்பும்போது கோலி எங்களிடம் வந்து அனைவரும் கீழே சென்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரவேண்டும். நாம் கொடுக்கின்ற வரவேற்பு, நாம் போடுகின்ற கூச்சல் இன்னும் பல ஆண்டுகளுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன்படியே நாங்கள் அனைவரும் சென்று பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தோம் என அஷ்வின் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.