இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக இந்தியா வந்தடைந்துள்ள நியூசிலாந்து அணி முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின் படைக்க இருக்கும் சாதனைகள் :
இந்நிலையில் இந்த இந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கும் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடரில் 5 மெகா சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அவர் படைக்கப்போகும் சாதனைகளை இங்கு காணலாம். 1) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான நாதன் லயன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் இந்த தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அவர் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார். 2) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 200 விக்கெட்டுகள் :
இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 15 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றும் பட்சத்தில் முதல் வீரராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற மெகா சாதனையை நிகழ்த்துவார். 3) சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐந்து விக்கெட்டுகள் : இதுவரை இந்திய அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அஸ்வின் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இன்னும் ஒரு முறை அவர் இந்த தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷேன் வார்னேவை பின்னுக்கு தள்ளி அஸ்வின் இரண்டாம் இடத்தை பிடிப்பார். 4) அதிக டெஸ்ட் விக்கெட்டில் ஏழாவது இடம் : அஸ்வின் இதுவரை 102 போட்டியில் விளையாடி 527 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் இந்த தொடரில் அஷ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை தாண்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிப்பார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் விலகல் – நமக்கு நல்லது தான்
5) இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட் : இதுவரை இந்திய மண்ணில் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே 476 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதுவே இந்திய வீரர் ஒருவர் இந்திய மண்ணில் எடுத்த அதிக டெஸ்ட் விக்கெட்டுகளாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய மண்ணில் இதுவரை 466 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் இன்னும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்த சாதனையும் அவர் முறியடிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



