எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் தெரிவித்து அணியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளது.
வருண் சக்கரவர்த்திக்கு இந்த வாய்ப்பு குடுங்க :
அந்த வகையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளதால் அவருக்கு பதிலாக முகமது சிராஜை சேர்க்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகமது சிராஜை தாண்டி இந்திய ஒருநாள் அணியில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார்.
எனவே என்னை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியை தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. இதில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் என்னை பொறுத்தவரை அதில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு வீரரை நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்புவது சரியான விஷயமாக இருக்காது.
இதையும் படிங்க : டி20 மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளிலும் இந்த திட்டத்துடன் தான் இந்திய அணி விளையாடும் – கவுதம் கம்பீர்
மேலும் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டியில் விளையாடியதும் கிடையாது. எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பின்னர் அதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.