- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் நபராக இந்த சாதனையை செய்து வரலாறு படைத்த – அஷ்வின்

இலங்கைக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது.

இதை தொடர்ந்து பெங்களூருவில் நடந்த இந்த தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டியில் மீண்டும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கை பந்தாடிய இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்து வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. முன்னதாக மார்ச் 12-ஆம் தேதியன்று பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை மொகாலியில் நடந்த முதல் போட்டியை விட சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அனுபவ வீரரான மேத்யூஸ் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதன் காரணமாக 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக 2வது இன்னிங்சிலும் ஜொலித்த ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 50 ரன்களும் குவித்தனர். இறுதியில் 447 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு அதன் கேப்டன் திமுத் கருணரத்னே தனி ஒருவனாக நங்கூர பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்து 107 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடினார். ஆனால் இதர இலங்கை வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி வெறும் 208 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

அசத்தல் அஷ்வின்:
இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் தோல்வியை தவிர்க்க போராடிய இலங்கைக்கு ஜோடி சேர்ந்த கருணரத்னே – குஷால் மெண்டிஸ் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே நின்றார்கள்.

அப்போது குஷால் மெண்டிஸ் விக்கெட்டை அஷ்வின் எடுத்ததால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் இலங்கையின் எஞ்சிய விக்கெட்டுகளை எடுத்த இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8-வது பந்துவீச்சாளர் என்ற தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டைன் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதுநாள் வரை அந்த சாதனையை 93 போட்டிகளில் 439 விக்கெட்களை எடுத்து தன்வசம் வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைனை 86 போட்டிகளில் 442 விக்கெட்கள் எடுத்துள்ள அஸ்வின் தற்போது முந்தியுள்ளார்.

- Advertisement -

கிங் ஆஃப் டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
ஏற்கனவே மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற கபில்தேவ் சாதனையையும் அவர் முறியடித்தார். இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற மகத்தான சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பி.சி.சி.ஐ செய்துள்ள அதிரடி மாற்றம் – 4 புதிய ரூல்ஸ் இதோ

ஆம் டி20 கிரிக்கெட்டின் வருகையால் அழிவின் விளிம்பிற்கு சென்ற டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் வண்ணம் கடந்த 2019-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 முதல் 2021 வரை நடைபெற்ற இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் முதல் சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து வென்றது. அதன்பின் தற்போது 2021 – 23 வரை வரலாற்றின் 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இதுவரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 21 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் அதில் 100 விக்கெட்களை எடுத்து இந்த புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே 14 போட்டிகளில் 71 விக்கெட்களை எடுத்து வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையான 2019 – 2021 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக வரலாற்றில் தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -