வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி மாத துவக்கத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர வெள்ளை பந்து கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் முதல்முறையாக விராட்கோலி சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

கழட்டிவிடப்பட்ட அஷ்வின்:
இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பின் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 4 வருடங்கள் கழித்து அஷ்வின் இடம் பிடித்திருந்தார்.
அந்த உலக கோப்பையில் முழுமையாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்ட அவர் அதன் பின் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அசத்தினார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் இடம் பிடித்திருந்தார்.

பார்ம் இல்லாத குல்தீப் யாதவுக்கு இடம்:
அந்த ஒருநாள் தொடரில் ஒருசில விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்காது என கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்தன. தற்போது அதே போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 என எந்த ஒரு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
ஒருநாள் அணியில் அவரின் இடத்தில் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் சமீப காலங்களாக விளையாடாத குல்திப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் கழட்டி விடப்பட்ட அவர் அதன்பின் இதுவரை ஐபிஎல் உட்பட எந்த ஒரு போட்டியிலும் விளையாடி தன்னை நிரூபிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஓரங்கட்டப்படும் அஷ்வின்:
தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே அஸ்வின் விலகியுள்ளார் என சில செய்திகள் கூறுகின்றன. ஆனால் அந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அஷ்வின் எந்தவித காயமும் இல்லாமல் விளையாடியதை நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். அத்துடன் பும்ரா மற்றும் ஷமிக்கு ஓய்வு, காயத்தில் இருந்து அக்சார் படேல் திரும்பியுள்ளார்,
ஜடேஜா இன்னும் முழுமையாக குணமாகவில்லை என வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் விலகிய வீரர்கள் பற்றிய விவரங்களை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அஷ்வின் எதனால் நீக்கப்பட்டார் என்ற விவரத்தை பிசிசிஐ தெரிவிக்காதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணிக்காக விளையாடுவது என் கனவு. அது நிஜமானத்தில் மகிழ்ச்சி – இளம்வீரர் பூரிப்பு
மீண்டும் சூழ்ச்சி வலை:
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய வெள்ளைப்பந்து அணியில் இதேபோல காரணமில்லாமல் அஷ்வின் கழட்டிவிடப்பட்டது பல தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும். தற்போது அதே போலவே மீண்டும் அவருக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



