இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் தோற்கடிக்கும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட எஞ்சிய இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருமே 35 ரன்கள் கூட தாண்டாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால் தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசி சில சாதனைகளையும் படைத்து இந்தியாவை காப்பாற்றியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
ஆண்டர்சனின் புகார்:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பசீர், ரீகன் அகமது தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அஸ்வின் 2வது நாளிலும் தொடர்ந்து பேட்டிங் செய்தார். குறிப்பாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிக்க உதவ வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஒரு ஓவரின் போது எதிர்புறம் நின்றார்.
அப்போது பந்து வீசுவதற்காக ஆண்டர்சன் ஓடிவந்த சமயத்தில் அஸ்வின் தன்னுடைய தோள்பட்டை பகுதியில் வியர்வையால் ஒட்டிக்கொண்டிருந்த சட்டையை சரி செய்வதற்காக கைகளை ஆட்டியதாக தெரிகிறது. மறுபுறம் பந்து வீசுவதற்காக ஓடி வந்த ஆண்டர்சன் அவர் கைகளை அசைத்ததால் கவனம் சீர்குலைவதாக கருதி வீசாமல் பாதியிலேயே நின்று விட்டார். மேலும் அஸ்வின் தம்முடைய கைகளை ஆட்டி வேண்டுமென்றே கவனத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் நடுவரிடம் ஆண்டர்சன் புகார் செய்தார்.
அதன் காரணமாக அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து நடுவர் உள்ளே புகுந்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து நடந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடிய அஸ்வின் அடுத்த சில பந்துகளில் ஆண்டர்சனுக்கு எதிராக பவுண்டரியை பறக்க விட்டார்.
இதையும் படிங்க: சி.எஸ்.கே பிளான் பண்ணி வச்சிருந்த வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கவுள்ள ஆர்.சி.பி – செம பிளான் தான்
இருப்பினும் அதன் காரணமாக பதற்றமடைந்த அஸ்வின் அதற்கடுத்த பந்திலேயே ஆண்டர்சன் வேகத்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருவேளை அந்த இடத்தில் அந்த பிரச்சனை ஏற்படாமல் அஸ்வின் பதற்றமடையாமல் தொடர்ந்து விளையாடிருந்தால் இன்னும் சில ரன்களை கூடுதலாக அடித்திருப்பார் என்றே சொல்லலாம். அந்த வகையில் அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கடைசியில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது என்றால் மிகையாகாது.