ஃபீல்டிங் செய்யும் போது மோதிக்கொண்ட இலங்கை வீரர் – மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் பிராத்தனை

Sri Lanka Injury
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் போராடி இழந்த இலங்கை அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதை விட மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்ட அந்த அணி ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் 317 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான உலக சாதனை படைத்தது.

அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக பந்து வீசிய இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 50 ஓவர்களில் 390/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் சதமடித்து 116 ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதத்தை விளாசி 166* ரன்களும் குவித்தனர். அதைத்தொடர்ந்து 391 என்ற பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

ரசிகர்கள் பிரார்த்தனை:
மொத்தத்தில் 6 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து இந்த சுற்றுப்பயணத்தை ஏமாற்றத்துடன் நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியுள்ளது. அப்படி ஏமாற்றமாக அமைந்த கடைசி போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 42 ஓவரில் இந்தியா 291/2 ரன்களுடன் இருந்த போது 94 ரன்களில் சதத்தை நெருங்கினார். அப்போது சமிகா கருணரத்னே வீசிய 43வது ஓவரின் 5வது பந்தில் ஸ்கொயர் லெக் மற்றும் டீப் மிட் விக்கெட் ஆகிய திசைக்கு இடைப்பட்ட இடைவெளியில் விராட் கோலி அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார்.

அதை தடுப்பதற்காக இரு திசைகளிலும் இருந்து வந்த இலங்கை வீரர்கள் ஜெஃப்ரி வாண்டர்சை மற்றும் ஆசன் பண்டாரா ஆகியோர் பந்தின் மீது மட்டும் கவனத்தை வைத்து ஒருவரை ஒருவர் கவனிக்காமல் வேகமாக ஓடி வந்ததால் எதிர்பாராத வகையில் மோதிக்கொண்டனர். அதனால் கடுமையான காயத்தை சந்தித்து வலியை உணர்ந்த அவர்கள் மைதானத்திலேயே சுருண்டதை பார்த்து ரசிகர்கள் பதறிப் போனார்கள். அதே போல் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய அணியினரும் என்னவாயிற்று என்று பதற்றமடைந்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இலங்கை அணையின் மருத்துவ குழுவினர் அவர்களை உடனடியாக சென்று சோதித்தனர். அதில் பண்டாரா லேசான காயத்தை மட்டுமே சந்தித்ததால் எழுந்து நடந்த நிலையில் வண்டெர்சை மட்டும் அதிகப்படியான காயத்தை சந்தித்ததால் எழுந்து நடக்க முடியாமல் தடுமாறினார். அதனால் வேறு வழியின்றி அவரை படுக்கை பலகை வாயிலாக இலங்கை அணியினர் தூக்கி சென்றதைப் பார்த்து இருநாட்டு ரசிகர்களும் சோகமடைந்தனர். மேலும் மேற்கொண்டு காயத்தை சோதிப்பதற்காக இருவருமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: IND vs SL : ரொம்ப ட்ரை பண்ணேன். ஆனா என்னால முடியல – ஆதங்கத்தை வெளிப்படுத்திய முகமது சிராஜ்

அதில் ஜெஃப்ரி வாண்டர்சை விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு பதிலாக விதி முறைப்படி நடுவரின் அனுமதியுடன் துணித் வெல்லலேகே எஞ்சிய போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடினார். மேலும் அவர்களது காயத்தின் நிலைமை என்னவென்று இன்னும் தெரிய வரவில்லை. இருப்பினும் இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும் அவர்கள் பெரிய காயங்களை சந்திக்காமல் நல்ல படியாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

Advertisement