
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது 43 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் மேலும் ஒரு சீசன் ஆடுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமானது அவரை நான்கு கோடி ரூபாய்க்கு அன் கேப்ட்டு வீரராக தக்க வைத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் அவர் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரமாக பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தோனிக்கு எதிராக பந்து வீசும் போது எந்த ஒரு திட்டத்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன் அதற்கான காரணமும் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தோனியை பார்த்து அனைத்து பவுலர்களுமே பயப்படும் வேளையில் அர்ஷ்தீப் சிங்கும் தோனிக்கு எதிராக பந்துவீச எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் கூறியதாவது : தோனிக்கு எதிராக பந்து வீசும் போது நான் எந்த ஒரு திட்டத்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன். என் மனதில் ஓடுவதெல்லாம் ஒரே ஒரு விடயம் தான் தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது.
ஏனெனில் அவருக்கு எதிராக பந்துவீசும் போது அவர் சிக்ஸ் அடிக்கவோ, பவுண்டரி அடிக்கவோ நினைத்தால் நிச்சயம் அடித்து விடுவார். எனவே அவர் என்னுடைய பந்து எதிர்கொள்ளக்கூடாது என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருக்கும். ஒருவேளை நான் அவருக்கு எதிராக எந்த வகையான திட்டத்துடன் பந்து வீசினாலும் நிச்சயம் அவர் அடிக்கும் மூடில் இருந்தால் பந்து வெளியே சென்று விடும்.
இதையும் படிங்க : ஸ்டீவ் ஸ்மித்தின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – ஆனால் பேட்டிங்கில் இல்லை
எனவே நான் அவருக்கு எதிராக பந்து வீச தயங்குவேன் என்று கூறியுள்ளார். இதுவரை தோனிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் 14 பந்துகளை வீசியுள்ள அர்ஷ்தீப் சிங் அவரது விக்கெட்டை இதுவரை வீழ்த்தியது கிடையாது. அந்த 14 பந்துகளில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி என அவருக்கு எதிராக 25 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.