இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும், 55 டி20 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் அவர் 65 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுதான் என்னுடைய இலக்கு :
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி விட்டாலும் இன்றளவும் அவருக்கு டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் போட்டியின் துவக்கத்திலேயே பந்தை ஸ்விங் செய்து அசத்தும் அவருக்கு டெஸ்ட் வாய்ப்பு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய எதிர்காலம் குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில் : என்னுடைய விளையாட்டை நான் மிகவும் நேசித்து விளையாடுகிறேன். இந்திய அணிக்காக அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை. காலம் அவ்வளவு வேகமாக ஓடிவிட்டது.
எப்போதுமே நான் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமே கவனிப்பேன். எதிர்காலத்தை பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. ஆனாலும் என்னுடைய மனதில் பெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நிச்சயம் நான் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக செயல்படுவேன்.
எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்க விரும்பவில்லை. என்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்க வேண்டும் என்பதை மட்டுமே யோசித்து வருகிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த டி20 உலக கோப்பை தொடரானது வர இருக்கிறது. அதற்காக இன்னும் அதிகளவு பயிற்சிகளை எடுத்து இன்னும் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்.
இதையும் படிங்க : ஆஸி டெக்னிக் ஓட்டையை சரிசெஞ்சு.. ஆடுனா ரூட் 100% சச்சின் சாதனையை உடைக்கலாம்.. மைக்கேல் வாகன்
எந்த போட்டியில் விளையாடினாலும் நான் இந்திய அணிக்காக 100 சதவீத பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் இனிவரும் காலத்தில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



