சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து செப்டம்பர் 10ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தவிருக்கும் வரலாற்று சாதனை :
இதற்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ள அர்ஷ்தீப் சிங் முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : 26 வயதான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் மேலும் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்துவதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.
அதோடு அடுத்த போட்டியிலேயே அந்த சாதனை நிகழும் பட்சத்தில் 64 போட்டிகளிலேயே 100 சர்வதேச டி20 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த ஹாரிஸ் ரவுப் 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனால் துவக்க வீரராக மட்டுமின்றி அந்த இடத்திலும் களமிறங்கி அசத்த முடியும் – கோச் அளித்த பேட்டி
அவரது இந்த சாதனையை அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் முறியடிக்க வாய்ப்புள்ளது. அப்படி அடுத்த போட்டியிலேயே அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டை வீழ்த்தினால் ஹாரிஸ் ரவுப்பை பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



