ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாக ரோகித் மற்றும் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளனர். அந்தளவுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக எதிரணிகளை சொல்லி அடித்த அந்த ஜோடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
அழிக்க முடியாது:
அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றாலும் இந்திய டி20 அணியில் ஏற்படுத்திய மரபும் தாக்கமும் எப்போதும் அழியாது என்று அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா பவுலர்களின் கேப்டன் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமான குறிப்பு விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பங்களிப்புகள் மகத்தானவை. அவர்களின் பாரம்பரியம் தலைமுறைகள் தாண்டியும் நினைவில் வைக்கப்படும். டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடி கூர்மையான கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய அளவுகோலை அமைத்துள்ளார்”
“விராட் பாய் தனது நிலையான செயல்பாடுகளால் உலகம் முழுவதிலும் உள்ள வீரர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அவர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, அழுத்தத்தின் கீழ் அசத்திய செயல்பாடுகள் என்னைப் போன்ற பல இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. உயர்தரத்தில் அசத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை காண்பித்த அவர்களின் தரத்தை சாதனைகள் பேசும்”
இதையும் படிங்க: டி20 உலககோப்பையை ஜெயிச்சி குடுத்த அவருக்கே இந்திய அணியில் இடமில்லையா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இனிமேல் விளையாட மாட்டார்கள் என்றாலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து எங்களை உத்வேகமடைய வைக்கும். ரோஹித் பாய் தலைமையில் விளையாடியது அற்புதமான அனுபவம். அவர் பவுலர்களின் கேப்டன். ஏனெனில் அவர் பவுலருக்கு முழுமையான சுதந்திரம் கொடுப்பார். அத்துடன் அணியை மிகவும் நேர்மறையாக வைத்துக் கொள்ள அவர் தனித்துவமான வழியை கையாண்டார். அது அதிக அழுத்தமான நேரத்தில் அசத்துவதற்கு உதவுகிறது” என்று கூறினார்.



