
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது கட்டாக் நகரில் இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்த தொடரில் இடம் பிடிக்கும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் விளையாடுவார்கள் என்பதனால் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே டி20 போட்டிகளை பொருத்தவரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருவதால் வீரர்களுக்கு இடையேயும் பெரிய போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஏனெனில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்து வரும் வேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தை ஹார்திக் பாண்டியா பூர்த்தி செய்து இருக்கிறார். அதனால் எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கு ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளை பொறுத்தவரை 68ஆட்டங்களில் விளையாடி 105 விக்கெட்டுகளை எடுத்து சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக இருக்கும் அர்ஷ்தீப் சிங் தனது இடத்தினை பிடிக்க போராடி வருகிறார். ஏனெனில் ஹர்ஷித் ராணாவிற்கு கௌதம் கம்பீர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதையும் படிங்க : எங்களோட பெருமையை நாங்க இழக்க முடியாது.. ஆர்.சி.பி போட்டிகள் இங்கு தான் நடக்கும் – துணை முதல்வர் உறுதி
ஏனெனில் இந்திய அணியின் பேட்டி ஆர்டரில் பின் வரிசையிலும் பேட்டிங் தெரிந்த வீரர் இருக்க வேண்டும் என்பதற்காக ஹர்ஷித் ராணாவிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலும் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என ஒருபுறம் ஆதரவும் இருந்து வருகிறது.